மத்திய அரசு விரைவில் எரிபொருள் நுகர்வு அடிப்படையிலான வாகனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது.
இந்தியாவில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், காற்று மாசை குறைக்கும் பொருட்டும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காற்று மாசை குறைக்க மின்சார வாகனங்களின் பயன்பாடு நாடு முழுவதும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காற்று மாசை குறைப்பதோடு, எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு விரைவில் எரிபொருள் நுகர்வு அடிப்படையிலான வாகனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MORTH) மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் விதியைத் திருத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதில் எரிபொருள் நுகர்வு தரநிலைகளின் (FCS) கீழ் இலகுரக மற்றும் நடுத்தர பயணிகள் வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது இங்கு இறக்குமதி செய்யப்பட்ட தனிநபர் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு வகைகளில் இலகுரக, நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் இந்த விதிமுறைகளின் படி, எவ்வளவு பெட்ரோல், டீசல் நுகர்வுடன் இயக்கப்படுகின்றன, எவ்வளவு சிக்கனமாக எரிபொருளை செலவிடுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட உள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட விதிமுறைகள் அமலாக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் அதிக எரிபொருள் சேமிப்பு திறன் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம் என்றும் MORTH தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாசு அளவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த திட்டம் ஒரு விதியாக மாறியதும், வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த அதிக முதலீடு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வாகனத் தொழில் தரநிலை 149 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள உற்பத்தியின் இணக்க நடைமுறையின்படி, தரநிலைகள் தொடர்ந்து இணங்குவது சரிபார்க்கப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் MORTH தெரிவித்துள்ளது. இந்த சமீபத்திய அறிவிப்புக்கு முன், எரிபொருள் நுகர்வு தரநிலை இணக்கமானது M1 வகை மோட்டார் வாகனங்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. தற்போது எட்டு இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள், 3.5 டன்கள் வரை மொத்த எடை கொண்ட வாகனங்களுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும் என தெரிவித்துள்ளது.
ALSO READ | 10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை.. நெகிழ வைத்த இந்திய ரயில்வே
இந்த புதிய விதியை 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனைவரும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான வேக எரிபொருள் நுகர்வு (CSFC) நெறிமுறைகளின் படி, டிரக்குகள் 40 kmph மற்றும் 60 kmph என்ற நிலையான வேகத்தில் சோதனை பாதையில் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பேருந்துகள் 50 kmph என்ற நிலையான வேகத்தில் இயக்கப்படுகின்றன. இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டதும், இந்த வகைகளில் உள்ள ஒவ்வொரு மாடல் வாகனத்திற்கான சோதனை முடிவுகளை ஒரு போர்ட்டலில் பதிவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.