பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் காணப்படும் உயர்வு காரணமாக புதிய வாகனங்களை வாங்குவோரின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானியங்களை அறிவித்து வருகின்றன. எனவே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஓலா போன்ற பிரபல எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களின் விற்பனை சரிந்த போதும், இதுவரை இந்தியாவில் 13 லட்சத்துக்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.
மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "இந்தியாவில் மொத்தம் 13.34 லட்சம் மின்சார வாகனங்கள் உள்ளன, அதே நேரத்தில் மின்சாரம் அல்லாத வாகனங்களின் எண்ணிக்கை 27.81 கோடியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read:புதிய OnePlus 10T ஸ்மார்ட்போன்.. கேமரா அம்சங்களை வெளிப்படுத்திய நிறுவனம்.!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்த மத்திய இணையமைச்சர், பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும் வாகன உமிழ்வு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் 2015ம் ஆண்டில் (இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் (FAME India)) வேகமான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தித் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது 5 ஆண்டு திட்டம், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல், 10,000 கோடி ரூபாய் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் பேட்டரி விலையை குறைக்கும் வகையில், நாட்டில் மேம்பட்ட வேதியியல் செல் (ACC) உற்பத்திக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மே 12, 2021 அன்று ஒப்புதல் அளித்தது. பேட்டரி விலை குறைவதால் மின்சார வாகனங்களின் விலையும் குறைக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Also Read:டியாங்காங் விண்வெளி நிலையத்தின் 2ஆம் தொகுதியை விண்ணில் ஏவிய சீனா!
எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்களுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, 2021, செப்டம்பர் 15 அன்று ஐந்து ஆண்டுகளுக்கு ₹ 25,938 கோடி பட்ஜெட் செலவில் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்கள்/சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பச்சை நிற நெம்பர் பிளேட்கள் வழங்கப்படும் மற்றும் அனுமதி தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவதோடு, நுகர்வை மேலும் அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.
அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, டெல்லியில் அதிகபட்சமாக 1,56,393 வாகனங்களும், மகாராஷ்டிரா 1,16,646 மின்சார வாகனங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Electric car, Sales