இந்திய பைக் பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்த ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
நீண்ட தூர பைக் பயணம் மற்றும் சாகச பயணத்தை விரும்பும் இந்தியர்களின் நம்பர் ஒன் தேர்வாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411) கடந்த 15ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற நீண்ட நாள் சோதனைக்குப் பிறகு தற்போது விற்பனைக்கு வந்துள்ள ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 சிறப்பம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக், ஹிமாலயன் பைக் எஞ்சின் மற்றும் பிளாட்ஃபார்ம் அடிப்படையில் நிறைய விஷயங்களில் ஒத்திருக்கிறது. அதே சமயம் ஏடிவியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக்கில் 19 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஹிமாலயன் பைக்கில் முன்பக்கம் 21 இன்ச் வீலும், பின்பக்கம் 19 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டிருக்கும். ராய்ல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை நிர்வாகிப்பதை எளிமையாக்கவும், இந்திய சாலைக்கு ஏற்றதாகவும் இருக்கவே வீல் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்க்ராம் 411 பைக் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அடிப்படையிலானது என்பதால், டேங்க், சைட் பேனல்கள் மற்றும் ஃபெண்டர்கள் உட்பட பல விஷயங்கள் கிட்டதட்ட ஒத்துப்போகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை குறைவான வெர்ஷன் என்பதால், ஸ்க்ராம் 411 பைக்கில் இரண்டாம் நிலை ஃபெண்டர், உயரமான விண்ட்ஸ்கிரீன் அல்லது ரேப்பரவுண்ட் ஃப்ரேம் ஆகியவை இடம் பெறவில்லை. மேலும் பிளவுபட்ட இருக்கைகளுக்குப் பதிலாக ஒற்றை-துண்டு இருக்கை இடம் பெற்றுள்ளது. பின்பக்க லக்கேஜ் ரேக் அகற்றப்பட்டு, பின்பக்கத்திற்கான விளக்குகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன. இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் தோற்றத்தோடு ஒத்து இருக்க கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read : 200 கி.மீ. மைலேஜ் உத்தரவாதத்துடன் ’ஓபன் ரோர்’ பைக் அறிமுகம்...!
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனைப் போலவே, ஸ்க்ராம் 411 ஆனது 411சிசி சிங்கிள் சிலிண்டர் எல்எஸ்410 ஆயில்-கூல்டு எஞ்சின் மூலம் 24 பிஎஸ் ஆற்றலையும் 32 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஹிமாலயனுக்கு இணையான அளவு பொருட்களை தூக்கிச் செல்லும் திறனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : ரூ.85,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் - TATA Motors-ன் அதிரடி அறிவிப்பு!
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுடன் ஒப்பிடும் போது, புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பல அம்சங்களைத் தவிர்த்துள்ளதால், சற்று மலிவு விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப விலை சுமார் ரூ.2.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.