வாகனங்கள் எல்லாமே எலக்ட்ரிக் மயமாகி வருகிறது. லைட்வெயிட் ஸ்கூட்டர் முதல் 50 டன் சுமை ஏற்றும் டிரக் வரை அனைத்துமே தற்போது எலக்ட்ரிக் மயமாகி வருகிறது. எலக்ட்ரிக் மயத்திற்கு மாற வேண்டிய சூழலும் கட்டாயமும் உருவாகியுள்ளதால் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுமே எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது இந்தியாவின் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.
இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கம்பீரமான புல்லட் பைக்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. கம்பீரத்தின் அடையாளமாக இன்றும் இந்திய சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. வாகன பிரியர்களின் விருப்பத்தை அறிந்து ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் தேவையான தொழில்நுட்ப அப்டேட்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அனைத்து நிறுவன தயாரிப்புகளும் எலக்ட்ரிக் மயமாகி வரும் நிலையில் ராயல் என்ஃபீல்ட் இ-பைக் எப்போது வரும் என ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் இ-பைக்கை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப வல்லுநரான உமேஷ் கிருஷ்ணப்பாவை மின் வாகன உற்பத்திக்காக பணியமர்த்தியது. இவரே இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான ராயல் என்பீல்டு மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கி உள்ளார். மின்வாகன உற்பத்தி திட்டத்திற்காக கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாயை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இ-பைக் தயாரிப்பதற்காக தனி தளம் ஒன்றை உருவாக்கி அதற்கு எல்-எனப் பெயர் சூட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 1.8 லட்சம் வரை இ-பைக் தயாரிக்கவும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட் இ-பைக்கை கிளாசிக் மாடலில் தயாரிக்க உள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். கிளாசின் லுக்கில் நவீன தொழில்நுட்பம் என கலந்து கட்டி புல்லட் ரசிகர்களை ஈர்க்க உள்ளது ராயல் என்ஃபீல்ட்டின் இ-பைக். தொழில்நுட்ப விஷயத்தில் எலெக்ட்ரிக் பைக் பல மடங்கு சிறப்பானதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது போட்டியே எந்த நிறுவனம் அதிகம் ரேஞ்ஜ் மற்றும் அதிகம் தொழில்நுட்ப வசதிகளை வழங்குகின்றோம் என்பதில்தான் இருக்கின்றது. ஆகையால், ராயல் என்பீல்டு இந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது இந்தியாவின் எலெக்ட்ரிக் பைக்கில் பிரிவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இ-பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. டார்க் க்ரடோஸ், ரிவோல்ட் ஆர்வி400, அல்ட்ராவைலட் எஃப்77, ஓபென் ரோர், ப்யூர் இவி ஈகோடிரிஃப்ட், ஒடைசி எலெக்ட்ரிக் எவோக்கிஸ், கோமகி ரேஞ்ஜர் மற்றும் அடம் ஆகிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் வரிசையில் மற்ற எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு பெரிய போட்டியாளாராக ராயல் என்பீல்டு மின்சார பைக் வர இருக்கின்றது. ராயல் என்ஃபீல்ட்டின் இ-பைக் வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் விறபனைக்கு வரும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் : ரோசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Royal enfield