Renault Triber: கிராஷ் டெஸ்டில் சாதித்த சென்னை தயாரிப்பு ரெனால்ட் ட்ரைபர் கார்!

ரெனால்ட் ட்ரைபர்

கிராஷ் டெஸ்டில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட ரெனால்ட் மாடல்களிலேயே ட்ரைபர் தான் சிறந்த தரச் சான்றை பெற்றிருக்கிறது.

  • Share this:
‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பான ரெனால்ட் ட்ரைபர் கார் சர்வதேச கிராஷ் டெஸ்டில் அசத்தி பாதுகாப்புக்கான தர சான்றை பெற்றுள்ளது.

புதிதாக கார் வாங்குபவர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் காராக பார்த்து வாங்குவதற்கு முக்கியமானது. புதிய மாடல் கார்கள் விற்பனைக்கு வருகையில் அவை ‘குளோபல் என்சிஏபி’ என்ற சர்வதேச அமைப்பினால் கிராஷ் டெஸ்டுக்கு உள்ளாக்கப்படும். அந்த வகையில் காரின் பாதுகாப்பு தன்மை மதிப்பிடப்படும்.

இந்தியாவில் தயாராகும் பாப்புலரான கார்களை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் செய்து வருவது மக்கள் தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவில் பாதுகாப்பான கார்களை தயாரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஊக்கசக்தியாக மாறியுள்ளது.

அந்த வகையில் குளோபல் என்சிஏபி அமைப்பினால் டாடா ஆல்ட்ரோஸ், டாடா டியாகோ, டாடா நெக்ஸான், வோக்ஸ்வேகன் போலோ, மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்கள் நான்கு நட்சத்திரத்திற்கும் கூடுதலான தர மதிப்பீட்டை பெற்றிருக்கின்றன. இந்த லிஸ்டில் தற்போது ‘மேட் இன் இந்தியா’ ரெனால்ட் ட்ரைபர் காரும் இணைந்திருக்கிறது.

7 சீட்டர்கள் கொண்ட எம்.பி.வி செக்மெண்ட் காரான ரெனால்ட் ட்ரைபர் குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர தரச்சான்றை பெற்று அசத்தியிருக்கிறது.

 



கடந்த ஆண்டு அறிமுகமான ரெனால்ட் ட்ரைபர் காரின் பாதுகாப்பு, கட்டமைப்பு, உறுதிப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் தர மதிப்பீடு செய்யப்பட்டன. அதன்படி, காரில் செல்லும் பெரியவர்களை பாதுகாப்பதில் 5-க்கு 4 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5-க்கு 3 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

கிராஷ் டெஸ்டில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட ரெனால்ட் மாடல்களிலேயே ட்ரைபர் தான் சிறந்த தரச் சான்றை பெற்றிருக்கிறது. முன்னதாக ரெனால்ட் க்விட் ஒரு நட்சத்திர ரேட்டிங்கையும், டஸ்டர் கார் ரேட்டிங்கில் பூஜ்ஜியம் தரம் மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குளோபல் என்சிஏபி-யின் பொதுச் செயலர் அலேஜென்ரோ ஃபியூராஸ் கூறுகையில், குறிப்பிடத்தக்க வகையில் ரெனால் பெரியவர்களுக்கான பாதுகாப்பு செயல்திறனை அதிகரித்திருக்கிறது. 5 நட்சத்திர அளவிலான பாதுகாப்பை அடைவதற்கான குறிக்கோளுடன் இந்த முக்கியமான முன்னேற்றத்தை குறைந்தபட்சமாக பராமரிக்க ரெனால்ட் ஊக்குவிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்பக்க இரண்டு ஏர் பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டாக கொண்ட ரெனால்ட் ட்ரைபர் கார் 5.30 லட்ச ரூபாயில் தொடங்கி 7.65 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

ரெனால்ட் ட்ரைபர்


சென்னை ஓரகடம் அருகே ரெனால்ட் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 4.80 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவன கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர தரத்தை பெற்றிருப்பதன் மூலம் எம்.பி.வி செக்மெண்ட்டிலேயே பாதுகாப்பான காரான ரெனால்ட் ட்ரைபர் மாறியுள்ளது.
Published by:Arun
First published: