COVID: கரம்கோர்த்த IATA - கத்தார் ஏர்வேஸ்... எதற்கு தெரியுமா?

கத்தார் ஏர்வேஸ்

பயணிகளின் கொரோனா பரிசோதனை முடிவுகளை சரிபார்க்கும் வகையில், பன்னாட்டு விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) உருவாக்கியுள்ள டிஜிட்டல் பாஸ்போர்ட் செயலி வழியாக பயணிகளின் தரவுகளை சேகரித்து, விமானப் பயணம் செய்வதற்கு தகுதி உள்ளதா? என தெரிந்து கொள்ள உள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. ஏறத்தாழ அனைத்து நாடுகளும் குறிப்பிட்ட காலத்துக்கு பன்னாட்டு விமானப் பயணத்தை தடை செய்தன. சில நாடுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய விமானப் போக்குரவத்தை அனுமதித்தன. தற்போது அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் சீராக தொடங்கியிருக்கிறது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பாஸ்போர்ட்டுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை பயணிகள் கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.

தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை சமர்பிக்கப்பட்ட பின்னரே விமானப்பயணத்துக்கும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது கத்தார் ஏர்வேஸ் புதிய முயற்சியை இம்மாதம் முதல் சோதனை முறையில் தொடங்க உள்ளது. பயணிகளின் கொரோனா பரிசோதனை முடிவுகளை சரிபார்க்கும் வகையில், பன்னாட்டு விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) உருவாக்கியுள்ள டிஜிட்டல் பாஸ்போர்ட் செயலி வழியாக பயணிகளின் தரவுகளை சேகரித்து, விமானப் பயணம் செய்வதற்கு தகுதி உள்ளதா? என தெரிந்து கொள்ள உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பேசிய கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி அக்பர் அல் பாக்கர், விமானப் போக்குவரத்துறை கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் இருப்பதாக தெரிவித்தார். இதற்காக ஐ.ஏ.டி.ஏவுடன் கரம்கோர்த்திருப்பதாகவும், பயணிகளின் வேக்சினேஷன் தொடர்பாக அவர்கள் கொடுக்கும் தகவல்கள் மீது நம்பகதன்மை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில், தரவுகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார். குவைத், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், பாரீஸ் மற்றும் சிட்னியில் இருந்து அனைத்து கேபின் குழுவும் தோகாவை வந்தடைந்தவுடன், இதற்கான செயல்முறை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், கத்தார் ஏர்வேஸின் சோதனை முயற்சிக்கு ஆதரவளித்திருக்கும் கத்தார் அரசு மற்றும் விமானப் போக்குவரத்து துறைக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Also read... YouTuber: காற்றாலையால் இயங்கும் கார்: இயற்பியலாளரை பந்தயத்தில் தோற்கடித்து $10,000 வென்ற யூடியூபர்!

விமான போக்குவரத்தில் முன்னோடி ஏர்வேஸ்ஸாக இருக்கும் கத்தார் ஏர்வேஸ், கால சூழ்நிலைக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை ஏற்கொள்வதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்த அக்பர் அல் பாக்கர், பயமில்லாத பயணத்தை பயணிகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஐ.ஏ.டி.ஏவுடன் கரம் கோர்த்திருப்பதாக கூறினார்.

இது குறித்து பேசிய ஐ.ஏ.டி.ஏ இயக்குநர் வில்லி வால்ஷ், ஐ.ஏ.டி.ஏ கொடுக்கும் டிராவல் பாஸ் மூலம் பயணிகளின் வேக்சின் தொடர்பான தகவல்களை சரிபார்த்துகொள்ள முன்வந்திருக்கும் முதல் விமான நிறுவனம் கத்தார் ஏர்வேஸ் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

பல விமான நிறுவனங்கள் ஐ.ஏ.டி.ஏவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் போட்டிருந்தாலும், முதன்முறையாக சோதனையை தொடங்கியிருப்பது கத்தார் ஏர்வேஸ் எனவும் அவர் கூறியுள்ளார். விமானப் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் பன்னாட்டு விமானப் போக்குவரத்து சங்கம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான நம்பக்கதன்மையை ஏற்படுத்தும் வகையில் ஐ.ஏ.டி.ஏவின் டிஜிட்டல் மொபைல் பாஸ்போர்ட் அம்சத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் வில்லி வால்ஷ் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: