இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த திங்களன்று, அதாவது ஏப்ரல் 18ம் தேதி, மீண்டும் தனது கார்களின் மீதான விலை உயர்வை அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி இதோடு 5வது முறை மாருதி சுஸுகி நிறுவனம் தன் கார்களின் மீது 'ப்ரைஸ் ஹைக்கை' அறிவிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்புட் செலவுகள் அதிகரித்ததன் விளைவாகவே அமுலுக்கு வரும் இந்த விலை உயர்வு அவசியமானது என்று மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. இதன் கீழ் சராசரியாக, மாருதி கார்கள் இனி அதன் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து 1.3 சதவீதம் அதிக விலையில் விற்பனை செய்யப்படும்.
இப்படியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, மாருதி சுஸுகி தனது மாடல்களின் விலையை குறைந்தது ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, இதுபோன்ற விலை உயர்வுகள் கடந்த ஐந்து காலாண்டுகளில் மாருதி கார்களின் விலைகளை கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
Read Mode : ரெனால்ட் நிறுவனத்தின் 7 நாள் இலவச கார் பரிசோதனை முகாம்.. சலுகைகள், பரிசுகளுடன் அசத்தல் சம்மர் கேம்ப்!
இது ஒரு திடீர் விலை உயர்வு அல்ல; இந்த விலை உயர்வு குறித்து மாருதி முன்னரே குறிப்பிட்டு இருந்தது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, மாருதி சுஸூகி நிறுவனம், பல்வேறு இன்புட் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக அதன் வாகனங்களின் விலை தொடர்ந்து மோசமாக பாதிக்கப்படுவதாக கூறி இருந்தது. "கடந்த ஓராண்டு காலமாக, பல்வேறு இன்புட் செலவுகள் அதிகரித்து வருவதால், நிறுவனத்தின் வாகனங்களின் விலை தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வு மூலம் வாடிக்கையாளர்களுக்கு சில கூடுதல் செலவுகளை வழங்குவது நிறுவனத்திற்கு இன்றியமையாததாகிவிட்டது" என்று மாருதி சுஸூகி கூறி இருந்தது.
மாருதி - தற்போது இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் ஆகும். அதன் ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், வேகன்ஆர் போன்ற கார்கள் நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் சில ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய செலிரியோவில் தொடங்கி இந்நிறுவனம் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. மாருதி சுஸூகி நிறுவனம் தனது புதிய தலைமுறை எர்டிகாவை கடந்த வாரம் ரூ.8.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது. இந்த வாரம் புதன்கிழமை, மாருதி எக்ஸ்எல்6 எம்பிவி-யின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஆண்டு, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்றவற்றுக்கு போட்டியாக புதிய விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் புதிய காம்பாக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தவும் மாருதி திட்டமிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.