POLICE FINE 3000 ROYAL ENFIELD OWNERS AND COLLECT 30 LAKH IN FINES FOR MODIFIED EXHAUSTS ARU
மாடிஃபிகேஷன் புல்லெட்கள்: ராயல் என்ஃபீல்ட் ஓனர்கள் மீது கடுமை காட்டிய காவல்துறை - ரூ.30 லட்சம் அபராதம் வசூல்!
ராயல் என்பீல்ட்
4 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் இதுவரை பைக்குகளில் மாடிபிகேஷன் செய்த 2,970 ராயல் என்ஃபீல்ட் உரிமையாளர்களிடமிருந்து 29.7 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கார் என்றாலும் சரி, பைக் என்றாலும் சரி பொதுவாகவே மாடிஃபிகேஷன் என்பது மோட்டார் வாகன சட்ட விதி மீறல் ஆகும். மாடிபிகேஷன் செய்யக்கூடாது என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தினாலும் கேட்பாறில்லை. இந்த நிலையில் மாடிபிகேஷன் செய்வோர் மீது கடுமை காட்டும்படி நீதிமன்றமும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில் காவல்துறையினர் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தமும் இயல்பாகவே ஏற்பட்டுவிட்டது.
நாடு முழுவதுமே மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் போலீசாரின் முதன்மையான சாய்ஸ் ஆக இருப்பது ராயல் என்பீல்டு பைக்குகளே. வெளி சந்தைகளில் இருந்து பெறப்படும் உதிரி பாகங்களை வைத்து வித விதமான மாடிபிகேஷன்களை மேற்கொள்வதற்கு உகந்த வாகனமாக ராயல் என்பீல்ட் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாத் நகர காவல்துறை ஆணையர் ராயல் என்ஃபீல்ட் வாகன உரிமையாளர்கள் யாரெல்லாம் தங்களின் பைக்குகளில் சைலன்சர்களை மாற்றியுள்ளார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக குழுக்கள் சாலைகளில் ஆங்காங்கே எக்ஸ்ஹாஸ்ட் பைப்களை மாற்றியமைத்த ராயல் என்ஃபீல்ட் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
4 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் இதுவரை பைக்குகளில் மாடிபிகேஷன் செய்த 2,970 ராயல் என்ஃபீல்ட் உரிமையாளர்களிடமிருந்து 29.7 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தோராயமாக ஒவ்வொரு விதிமீறலுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் இந்த நடவடிக்கை தொடங்கிய முதல் 25 நாட்களில் 908 ரைடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.