மின்சார வாகனங்களுக்கு முழு வரி விலக்கு! தமிழ்நாடு அரசு அதிரடி

மின்சார வாகன உற்பத்திக்கு 15 சதவீதம் வரையும், அதற்கான பேட்டரி உற்பத்திக்கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.

மின்சார வாகனங்களுக்கு முழு வரி விலக்கு! தமிழ்நாடு அரசு அதிரடி
மாதிரிப்படம். (Photo: Reuters)
  • News18
  • Last Updated: September 16, 2019, 10:11 PM IST
  • Share this:
தமிழகத்தின் புதிய மின்சார வாகன கொள்கையை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திலேயே தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தின் புதிய மின்சார வாகனக் கொள்கையை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்தக் கொள்கையின்படி, அனைத்து மின்சாரப் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், இலகு வாகனங்கள் ஆகியவற்றிற்கு 100 சதவீத மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த சலுகை 2022-ம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும். அதுமட்டுமின்றி, மின்சாரப் பேருந்துகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் முதலீட்டுடன், குறைந்தபட்சம் 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.


இதுதவிர, தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு, ஜி.எஸ்.டி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை வரும் 2030-ம் ஆண்டு வரை மட்டுமே. மின்சார வாகன உற்பத்திக்கு 15 சதவீதம் வரையும், அதற்கான பேட்டரி உற்பத்திக்கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை 2025-ம் ஆண்டு வரை முதலீடு செய்யப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதோடு, அரசு தொழிற்பூங்காவில் ஆலை தொடங்கினால் நிலத்தின் விலையில் 20 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. தென்மாவட்டங்களில் இந்த சலுகை 50 சதவீதமாக கிடைக்கும்.
தமிழகத்தில் முதற்கட்டமாக 525 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவற்றுக்கான சார்ஜர் மையங்களும் தேவைக்கேற்ப அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, அரசின் சலுகைகளால் மின்சார வாகனங்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இதுதவிர, முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் உள்ள அனைத்து ஆட்டோக்களையும், அடுத்த 10 ஆண்டுகளில் இ-ஆட்டோக்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாகன கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading