கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி, 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரையிலான ஓராண்டுக் காலத்தில், விமானச் சேவைகளில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் குறித்து 478 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவதாக இது அமைந்துள்ளது.
இந்த ஓராண்டில், போக்குவரத்து சேவையை அளித்து வரும் நிறுவனங்களின் விமானங்களில் 177 முறை கண்காணிப்பு பணிகளையும், 497 முறை நேரடி ஆய்வுப் பணிகளையும், 169 முறை இரவுநேர கண்காணிப்பு பணிகளையும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மேற்கொண்டுள்ளது.
விமானப் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை பதில் அளித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், ”விமானங்களை இயக்கும்போது ஏதேனும் ஒரு இயந்திரம் அல்லது விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள டூல்ஸ்களின் செயல்பாடின்மை காரணமாகத் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அவற்றை விமான நிறுவனங்கள் சரி செய்து, நிலையான பாதுகாப்பு மற்றும் நீடித்த திறன் வாய்ந்த சேவைகளை வழங்க வேண்டியது கடமை ஆகும்.
பொதுவாக விமானத்தின் காக்பிட் பகுதியில் வீடியோ அல்லது ஆடியோ சிக்னல்களைப் பெறுவதில் தடங்கல் ஏற்படுவதாக பணியாளர்கள் புகார் கூறுகின்றனர் அல்லது விமானத்தை இயக்கும்போது ஏதேனும் சிரமங்களை உணர முடிவதாகக் கூறுகின்றனர்.
கடந்த 2021 - 2022 வரையிலான ஓராண்டுக் கால கட்டத்தில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள், நேரடி ஆய்வுகள், இரவு நேரக் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மேற்கொண்டது. இதில் 21 முறை விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலையில், தொடர்புடைய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக உரிமங்களை முடக்கி வைப்பது, எச்சரிக்கை கடிதங்களை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதிக புகாருக்கு உள்ளான ஸ்பைஸ் ஜெட் விமானம்
முன்னதாக, கடந்த ஜூன் 19ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் வரையிலும் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் குறைந்தபட்சம் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு டிஜிசிஏ கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, கோடைக் காலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பாக இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட விமானச் சேவைகளில் 50 சதவீத விமானங்களை மட்டுமே அடுத்த 8 வாரங்களுக்கு இயக்க வேண்டும் என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கட்டுப்பாடு விதித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airport, Flight, Flight travel