நாடு முழுவதும் எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகும் நிலையில், ஓலா நிறுவனம் தனது 1,400 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுவரை ஓலா நிறுவனத்தின் 12 பைக்குகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளான நிலையில், இந்த சம்பவங்கள் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து பிரச்னைக்குரிய வாகனங்களை திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
மார்ச் 26ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓலா நிறுவன ஸ்கூட்டர் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும் என அறிவித்துள்ள ஓலா நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,441 எலக்ட்ரிக் வாகனங்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்தார்.
இந்த வாகனங்களை சர்வீஸ் இன்ஜினியர்கள் முறையாக பரிசோதனை செய்வார்கள் எனவும் பேட்டரி, வெப்பம் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகள் முறையாக உள்ளதா என உரிய ஆய்வு செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:
இந்த நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்காதீங்க .. எச்சரிக்கை விடுக்கும் எஸ்பிஐ!
கடந்த சில வாரங்களாகவே ஓலா, ஒகினாவா, ப்யூர் இவி, ஜிதேந்திரா இவி ஆகிய நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்கள் வெடித்து தீவிபத்துக்குள்ளாகும் சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிவருகிறது. கடந்த புதன் கிழமை தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் ப்யூர் இவி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில் 80 வயது நபர் உயிரிழந்தார்.
இந்த விபத்துக்களை தொடர்ந்த ப்யூர் இவி நிறுவனம் தனது 2,000 வாகனங்களையும், ஓகினாவா நிறுவனம் தனது 3,000 வாகனங்களையும் பாதுகாப்பு காரணமாக திரும்பப்பெறவதாக அறிவித்தன.தற்போது ஓலா நிறுவனமும் தனது 1,400 வாகனங்களை திரும்பப் பெறுகிறது.
இந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பொறுப்பில்லாமல் வாகனங்களை தயாரித்தது அரசுக்கு தெரியவந்தால் அவர்கள் மீது கடும் அபராதம் விதித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளார். மேலும், தரமான எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு உரிய வழிமுறைகளை அரசு விரைவில் வெளியிட உள்ளதாக அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.