இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உருவாகி வரும் திடீர் டிமாண்டை கணக்கில் கொண்டு டாடாவில் ஆரம்பித்து பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளன. கார், பைக்குகளை விட இந்திய மக்களிடையே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா (Ola), 'ஓலா எலெக்ட்ரிக்' (Ola electric) எனும் பெயரில் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆரம்பத்தில் இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் உச்சத்தில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் EV ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பதும், அதனால் சில உயிரிழப்புகள் நிகழ்ந்ததும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது.
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன்பக்க சக்கரம் தானாகவே கழன்று விழுவதாகவும், இதனால் நடுரோட்டில் விபத்துக்கள் நிகழ்ந்ததாகவும் வாடிக்கையாளர்கள் பலரும் புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் தகவல்களை பகிர்ந்தனர். இப்படி அடுத்தடுத்து சிக்கலில் சிக்கியதால் ஓலா நிறுவனத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மளமளவென சரிய ஆரம்பித்தது.
அடுத்தடுத்த தீ விபத்து தொடர்பான சம்பவங்களால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் இழந்துவிட்டனர் என்பதை தற்போது வெளியாகியுள்ள விற்பனை ரிப்போர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் எலெக்ட்ரிக் பைக் விற்பனை மிகவும் பின்தங்கியதால் தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
VAHAN தரவுகளின்படி, பவிஷ் அகர்வால் நடத்தும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஜூன் 30ம் தேதி வரை, 5,869 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான ஜூன் மாத கணக்கீட்டின் படி, ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் 6,976 யூனிட்களையும், ஆம்பியர் நிறுவனம் 6,534 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.
Also Read : OLA Electric Scooter தந்த ஆபத்தான அனுபவம் - ஸ்கூட்டரை விற்ற நபர்.. என்ன நடந்தது.?
நாடு முழுவதும் 6,486 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து ஹீரோ எலக்ட்ரிக் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏத்தர் எனர்ஜி மே மாதத்தில் 3,797 வாகன பதிவுகளை பெற்றுள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஓலாவின் பதிவு எண்கள் மே 30 உடன் ஒப்பிடும்போது ஜூன் 30 அன்று 30 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மொத்தம் 12,698 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஓகினாவா மே மாதத்தில் 9,302 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது மற்றும் ஓலா எலக்ட்ரிக் 9,225 யூனிட் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளது. ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக எங்கள் வணிக முன்னுரிமையை நாங்கள் அளவீடு செய்தோம், மேலும் எங்கள் TAT (திருப்பு நேரம்) 48 மணி நேரத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். ஜூலையில், விநியோகச் சங்கிலி சிக்கல்கள் மறைந்துவிடும் மற்றும் எங்கள் வலுவான ஆர்டர் புக்கிங்ஸ் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
Also Read : எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!
இருப்பினும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சரியக்காரணம், பேட்டரி சர்ச்சை, எலெக்ட்ரிக் வாகனம் தீப்பிடிப்பு, பேட்டரி வெடித்து சிதறுவது போன்றவையாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike, Ola