பயன்படுத்தப்பட்ட கார்களை மறுவிற்பனை செய்யும் பிஸினஸில் குதித்துள்ள ஓலா நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் பேரை புதியாக வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.
டாக்ஸி பிஸினஸில் இருந்த ஓலா நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் மற்ற மார்க்கெட்டுகளையும் குறிவைத்து களமிறங்கி வருகிறது. இப்போது ஓலா கார்ஸ் எனப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மறுவிற்பனை தளத்தை தொடங்கி கார் விற்பனைகளை ஜோராக செய்து வருகிறது. இந்த தளத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே கார்களை வாங்கிக் கொள்ள முடியும். மாதாந்திர தவணை வசதி, ஒரு வருட உத்திரவாதம் உள்ளிட்ட சலுகைகளையும் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது ஓலா கார்ஸ்.
பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களே விற்பனை செய்யவும் முடியும். கார் மற்றும் பைக்குகள் ரீசேல் விற்பனை மிகப்பெரிய மார்க்கெட்டாக இருப்பதை உணர்ந்த ஓலா நிறுவனம், அந்த மார்க்கெட்டை குறிவைத்து பிஸினஸை ஜெட் வேகத்தில் விரிவாக்கம் செய்து வருகிறது.
Also read: ரூ.100ஐ தொட்டது டீசல் விலை.. பெட்ரோல் விலை இன்றும் (அக்டோபர் 23) ஏறுமுகம்!
மேனேஜர், கால்சென்டர், விற்பனையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ள ஓலா கார்ஸ், இந்த பிஸினஸை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மிகப்பெரிய நகரங்களிலும் இருக்குமாறு விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 12 மாதங்களில் ஓலா கார்ஸின் வாகன வர்த்தக தளத்தின் மொத்த வர்த்தக மதிப்பு 2 பில்லியனை எட்ட வேண்டும் என்ற நோக்கில் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் ஓலா, வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள், விற்பனை செய்யும் பணி, சண்டிகர், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் இந்தூர் உள்ளிட்ட நகரங்களிலும் ஓலா கார்ஸ் தளத்தை விரிவுபடுத்த உள்ளது.
அடுத்த 2 மாதங்களில் 30 நகரங்களிலும், ஒரு வருடத்தில் மேலும் 100 நகரங்களிலும் ஓலா கார்ஸ் நிறுவனத்தின் மறுவிற்பனை பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. இது குறித்து பேசிய ஓலா கார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் ஸ்ரீதர்தேஷ்முக், " ஓலா கார்ஸ் மறுவிற்பனை தளத்தில் இதுவரை சுமார் 5 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களில் ஓலா கார்ஸின் விற்பனை சேவை 30 நகரங்களுக்கும், இன்னும் ஒரு வருடத்தில் 100 நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால், சேவை மற்றும் விற்பனைக்கு சுமார் 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர்.
ஆட்டோமொபைல் துறையில் அனுபவம் உள்ளவர்கள், புதியவர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்து ஓலா கார்ஸ் நிறுவனம் பணியமர்த்தும். எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் 2 பில்லியன் என்ற சந்தை மதிப்பை எட்ட வெண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதற்கு ஏற்ப பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறவும் முயற்சி செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தார். பயன்படுத்தப்பட்ட கார்களை மறுவிற்பனை செய்யும் பிஸ்னஸில் ஓலா கார்ஸ் இறங்கியிருப்பதால், CarDekho, Cars24, CarTrade, Droom மற்றும் Spinny போன்ற தளங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Ola