பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. புதிதாக டூ வீலர் வாங்குபவர்களில் பெரும்பாலானவர்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது திரும்பி இருக்கிறது. ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையை பொறுத்தவரை, ஓகினாவா மற்றும் ஓலா ஆகியவை அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து தரவரிசையில் முன்னணியில் உள்ளன.
அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் உள்ளிட்டவை மக்களை EV-க்களின் பக்கம் அதிகம் திருப்பியுள்ளன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சில குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டில் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் எலெக்ட்ரிக் டூ வீலர்களின் தீ விபத்து சம்பவங்களுக்கு மத்தியில் பிரபலமாக உள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ஒகினாவா (Okinawa) நிறுவனம் இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவு அரசாங்கத்திடமிருந்து கணிசமான உந்துதலை பெறும் பிரிவு என்றாலும், மே மாதத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவிற்கு சிப் பற்றாக்குறை மற்றும் சமீபத்திய தீ விபத்துகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான தீ விபத்துகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏற்பட்ட பிறகு விற்பனை எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்றே கருதுகிறது. இது போன்ற நிகழ்வுகளை கவனித்த அரசாங்கம், ஓலா, ப்யூர் EV, ஒகினாவா மற்றும் பிற நிறுவனங்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க அறிவுறுத்தி இருக்கிறது.
இதனிடையே தீ விபத்துகளை சந்தித்தாலும் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகினாவா ஆட்டோடெக், பிரபலமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன பிராண்டாக மாறி இருக்கிறது. எப்படி என்றால் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஒகினாவா ஆட்டோடெக் கடந்த மே மாதம் அதிகபட்சமாக சுமார் 9,309 யூனிட்களை விற்றுள்ளது. ஆனால் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த மாதம் 9,225 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அடுத்த மாதமே ஓலாவை பின்னுக்கு தள்ளி ஒகினாவா முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,691 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது. ஆனால் கடந்த மாதத்தில் 9225 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யது உள்ளது.
Also Read : பேட்டரி இன்றி Harper ZX Series-I ஸ்கூட்டரை ரூ.41,999-க்கு அறிமுகம் செய்துள்ள கிரேட்டா!
முன்னணி பிராண்டுகளை தொடர்ந்து, 5,529 யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையுடன் Ampere நிறுவனம் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கடுத்து Ather நிறுவனம் 3,098 யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து 26.45 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. தொடர்ந்து, ஹீரோ எலெக்ட்ரிக் தனது விற்பனை எண்ணிக்கையில் 58.36 சதவீதம் குறைந்து 2,739 யூனிட்களை மட்டுமே விற்றுள்ளது. மொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் பங்களிக்கும் வகையில் TVS மோட்டார் நிறுவனம் மே மாதத்தில் 2,637 i-Qube-ஐ விற்று உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.