உலகம் தோன்றியதாய் சொல்லப்படும் பல மில்லியன் ஆண்டுகளாகவே இயற்கையின் சக்திதான் உலக இயக்கத்தின் உந்து சக்தியாக இருந்து வருகிறது. ஆனால் அந்த இயற்கையை புண்படுத்தி நாம் நமது சௌகரியங்களுக்கான அம்சங்களை நிறைவேற்றிக் கொள்கிறோம். தொடாந்து இயற்கை சீரழிக்கப்பட்டு வந்ததால் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன இயற்கை வளங்கள். அதோடு சுற்றுச் சூழலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில் மயமாகியுள்ள இந்த நவீன காலத்தில் எரி சக்தியின் தேவையையும் குறைத்துக் கொள்ள முடியாது. எனவே, இயற்கையை பாதிக்காத சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத மாற்று சக்தியை கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன் முனைப்பு தான் மின்சக்தி எரிசக்தியாக பயன்படுத்தப்படுவது. குறிப்பாக போக்குவரத்து வாகனங்களுக்கான பயன்பாட்டில் மின்சக்தியின் பயன்பாடு மிக வேகமாக அதிரிகரித்து வருகிறது. அதே சமயம் பேட்டரிகளின் பயன் மற்றும் மறு ஊக்கத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்டவை மிகப்பெரிய சவாலாக உள்ளது.இதனால் மாற்று சக்திக்கும் மாற்று கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மின்சக்திக்கு மாற்று சக்தி கண்பிடிக்க வேண்டும் என்பது பொருளில்லை.
மின்சக்தியின் ஆக்கத்திற்கு மாற்று உபாயம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் இப்போதைக்கு உள்ள சவால். தற்போது எலக்ட்ரிக் வாகனங்களில் நாம் பயன்படுத்தும் பேட்டரிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதை மறுசுழற்சி மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை வள பயன்பாட்டுடன் மேற்கொள்வதற்கான முயற்சி தான் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சியின் முதல் படி தான் ஃப்யூயல் செல்லின் அறிமுகம். அதென்ன ஃபயூயல் செல் என்கிறீர்களா? பார்க்கலாம்..
மாற்று ஊடு சக்தி எதுவும் இல்லாமல் தானாகவே மின்சக்தியை உருவாக்கும் அமைப்பு தான் ஃபயூயல் செல். நம்ப முடியவில்லையா.. பொறுங்கள் விளக்கமாக பார்க்கலாம்… இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ஃபயூயல் செல் தான் அந்த வரப்பிரசாதம். ஹைட்ரஜன் ஃபயூயல் செல்லைத் தான் பேட்டரிகளாக பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதாவது இந்த ஹைட்ரஜன் ஃபயூயல் செல்கள் எந்தவிதமான ஊடு சக்தியும் இல்லாமல் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனில் இருந்து மின்சக்தியை தயாரித்துக் கொள்ளுமாம். இந்த வகையான ஃப்யூயல் செல்கள் ஆனோட், கேத்தோட் என்கிற எதிர் மற்றும் நேர் முனை கொண்ட எலக்ட்ரோலைட் அமைப்பாக உருவாக்கப்படுகிறது.
எதிர்முனையில் ஹைட்ரஜனும் நேர் முனையில் ஆக்சிஜனும் செலுத்தப்படும் போது, ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் மூலம் எதிர்முனையில் செலுத்தப்படும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் புரோட்டான்களாகவும் எலக்ட்ரான்களாகவும் பிரிக்கப்படுகிறது. அப்படி பிரிக்கப்படும் எலக்ட்ரான்கள் வெளிப்புற சர்க்யூட் வழியாக அனுப்பப்பட்டு மின்சக்தியாக பயன்படுத்தப்படுகிறது. கேத்தோட் எனப்படும் நேர்முனையில் இருக்கும் ஆக்சிஜனோடு பிரிக்கப்பட்ட புரோட்டான்கள் சேரும் போது தண்ணீர் மற்றும் வெப்பம் உருவாகிறது. இது தான் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்லின் செயல்பாடு.
இந்த தொழில்நுட்பம் ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே விண்வெளிக்கான எரிசக்தி துறையில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. இதை எளிமைப்படுத்தி ஆட்டோ மொபைல்துறையில் பயன்படுத்தினால் சுற்றுச் சூழலை மாசு படுத்தாத மறுசுழற்சி எரிசக்தி கிடைத்துவிடும். இது கொஞ்சம் சவாலான நடைமுறை தான் ஆனால் சாத்தியப்படுத்தப்பட்டால் பெரிய நிம்மதி தான். அதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சாத்தியமில்லாத எத்தனையோ விசயங்களை அறிவியல் சாத்தியமாக்கியிருக்கிறது. அதனால் எதுவும் சாத்தியப்படலாம்.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike, Electric car