உலகளவில் புதுப்பிக்க முடியாத ஆற்றல்களை (non-renewable resources) மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பெட்ரோல், டீசல், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பு போன்ற அனைத்துமே புதுப்பிக்க முடியாத ஆற்றல்கள் மூலமாக நமக்கு கிடைக்கின்றவை. இதை அதிக அளவில் நாம் பயன்படுத்தி வருவதால் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதன் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது.
இதற்கு மாற்றாக புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை (renewable resources) நாம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் பல காலமாக கூறி வருகின்றனர். அந்த வகையில் சூரிய ஒளி ஆற்றல், காற்று ஆற்றல், நீர் ஆற்றல் போன்றவற்றை கொண்டு நமக்கு தேவையான மின்சாரம் முதல் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் வரை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் எம்.ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி ஒரு புதுவித கலப்பின ஆற்றல் மூலம் தனது உற்பத்தி ஆலைகளை நடத்தி வருகிறது.
ஹலோல் என்கிற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி மோட்டாரின் உற்பத்தி ஆலையில் 50% புதுப்பிக்க கூடிய ஆற்றலை கொண்டு இயங்குகிறது. இந்நிலையில் காற்று ஆற்றலை தனது ஆலைகளில் பயன்படுத்த ராஜ்கோட்டில் உள்ள கிளீன் மேக்ஸ் (CleanMax Wind Solar Hybrid Park ) நிறுவனத்துடன் இணைத்து காற்று மற்றும் சூரிய ஒளியினால் கலப்பின ஆற்றலை உருவாக்கி பயன்படுத்த உள்ளது.
ALSO READ | ஹிந்தி பாடலுக்கு பாவனை செய்து அசத்திய பழங்குடியின இளைஞர் - வைரலாகும் வீடியோ
ஹலோலில் உள்ள உற்பத்தி ஆலைக்கு சுமார் 4.85 மெகாவாட் காற்று-சூரிய கலப்பின ஆற்றலை பயன்படுத்துவதாக ஷாங்காய் ஹைட்ரஜன் புரொபல்ஷன் டெக்னாலஜி லிமிடெட் (SAIC) தெரிவித்துள்ளது. இதன் மூலம், 15 ஆண்டுகளில் தோராயமாக இரண்டு லட்சம் மெட்ரிக் டன் கார்பன்டை ஆக்ஸைடை குறைக்க முடியும் என்று எம்ஜி மோட்டார் கூறுகிறது. அதாவது 13 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு இது சமம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து எம்.ஜி மோட்டார் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். நிலையான எதிர்காலத்தை நோக்கிய செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையான எதிர்காலத்திற்காக எந்தவித மாசு கழிவுகளையும் வெளியேற்றாத வாகனங்களை உற்பத்தி செய்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்காக இது இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | மாஸ்க் போடுங்க... கொரோனா இன்னும் ஓயவில்லை : பிரதமர் மோடி எச்சரிக்கை
கிளியர் மேக்ஸ் நிறுவனத்துடனான எங்களின் உறவானது, ஒரு சுத்தமான உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான மற்றொரு படியாகும். இந்த நடவடிக்கையின் மூலம், நிலையான சூழலை உருவாக்குவதில் எங்களின் பங்களிப்பை மேம்படுத்தும். மேலும், நமது ஆற்றல் செலவினங்களையும் இதனால் குறைக்க முடியும் என்று ராஜீவ் கூறியுள்ளார்.
எம்.ஜி மோட்டார் மட்டுமன்றி மேலும் சில கார் தயாரிப்பு நிறுவனங்களும் இது போன்ற சுற்றுசூழலுக்கு பாதுகாப்பான செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். புதுப்பிக்க கூடிய ஆற்றல் வளங்களை பயன்படுத்தி வாகனங்களை தயாரித்து வந்தால் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றம் குறையும். இதனால் நமது பூமிக்கு பெரிய அளவில் மாசுபாடு ஏற்படாது என்று கிளியர் மேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் குல்தீப் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Motor