Home /News /automobile /

கோர விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி பயணித்த பென்ஸ் கார்... விபத்துக்கு தாக்குப்பிடிக்காதா..?

கோர விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி பயணித்த பென்ஸ் கார்... விபத்துக்கு தாக்குப்பிடிக்காதா..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த காஸ்ட்லி காரின் 2017 மாடலில் பயணித்தபோதுதான் விபத்தில் சிக்கி பலியானார் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India
  பென்ஸ் நிறுவன தயாரிப்புகளிலேயே மிகவும் பாதுகாப்பானதாக கூறப்படும் GLC ரக காரில் பயணித்த டாடா சன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதோடு, இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்பதையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்..

  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான எஸ்.யூ.வி. ரக கார்களில் ஒன்று GLC 220D 4 Matic இந்த காஸ்ட்லி காரின் 2017 மாடலில் பயணித்தபோதுதான் விபத்தில் சிக்கி பலியானார் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி.. அவர் பயன்படுத்திய பென்ஸ் GLC 220D காரின் 2017 மாடல் வெளிவந்த நேரத்திலேயே விலை 70 லட்சம் ரூபாய்களுக்கும் மேல்.. ஓட்டுநர், அவர் அருகே அமர்பவர் மற்றும் பின் இருக்கைகளில் அமர்பவர்கள் என அனைவரையும் பாதுகாக்கும் வகையில் இந்த காரில் இருப்பது 7 ஏர் பேக்குகள்.

  ஓட்டுநருக்கும், அவர் அருகே இருப்பவரின் முகங்களுக்கு மட்டுமல்லாமல், முழங்கால்களையும் பாதுகாக்க தனியாக பொருத்தப்பட்டுள்ளன இரண்டு ஏர் பேக்குகள். அதைத் தொடர்ந்து, ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், இஎஸ்பி எனப்படும் Electronic Stability Program, ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் என ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளை அடுக்கி வைத்துள்ளது பென்ஸ் GLC...

  எஸ்.ஆர்.எஸ். என்று சொல்லப்படும் Supplementary Restraint System தொழில்நுட்பத்தை கொண்டவை இந்த பென்ஸ் காரில் உள்ள ஏர் பேக்குகள். அதாவது, கார் விபத்தில் சிக்கும்போது அதன் கோணம், பாதிப்பின் தீவிரம் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்பட்டு, அதிவிரைவில் பாதுகாக்கக் கூடியதுதான் இந்த எஸ்.ஆர்.எஸ். தொழில்நுட்பம்.

  மிகவும் ஆபத்தான நேரங்களில் மட்டுமே செயல்படக் கூடிய இந்த அதிவிரைவு தொழில்நுட்பம் இயங்குவதற்கு மிகவும் அவசியமானது சீட் பெல்ட் அணிவதே. ஏனெனில், சீட் பெல்ட்டின் சென்சாரைக் கணித்தே, கார்கள் விபத்தில் சிக்கிய நொடிப்பொழுதில் சிறகைப் போல் விரிவடைகின்றன ஏர் பேக்குகள்..

  பென்ஸ் காரின் இந்த சீட் பெல்ட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது Pre Safe System எனக்கூடிய ஒரு நுட்பமான பாதுகாப்பு வசதி. கார் விபத்தில் சிக்கும்போது, பயணிகளை மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொள்ள உதவும் இந்த தொழில்நுட்பத்தால், டேஷ்போர்டு மற்றும் விண்ட் ஷீல்டை நோக்கி பயணிகள் தூக்கி எறிவது தவிர்க்கப்படும்.. இத்தனை பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த காரில் ஒரே குறை என்றால், பின் பக்க பயணிகளின் முகத்தை பாதுகாக்கும் ஏர் பேக்குகள் இல்லாததே..

  ஆனால், அங்கு அமர்பவர்கள் சீட் பெல் அணிந்திருந்தால், எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை அடித்துச் சொல்கிறது பென்ஸ் நிறுவனம்..

  Read more: அப்பாடா... நிம்மதி பெருமூச்சு விடும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள்.... ஏன் தெரியுமா?

  இதையெல்லாம் சோதித்துப் பார்த்து, அதன் அடிப்படையிலேயே பென்ஸ் GLC 220D காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங்கை வாரி வழங்கியுள்ளது யூரோ NCAP என்ற அமைப்பு. என்னதான் பாதுகாப்பு வசதிகள் பல கொட்டிக் கிடந்தாலும், அதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே உயிருக்கு உத்தரவாதம் என்பதற்கு சரியான உதாரணம் சைரஸ் மிஸ்திரியின் விபத்து.

  இந்த விபத்தின்போது, காரின் முன்பக்கம் அமர்ந்து, சீட் பெல்ட் அணிந்தபடி, காரை ஓட்டி வந்த பெண்ணும், அவரது கணவரும் உயிர்பிழைத்துக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், பின்னால் அமர்ந்திருந்த மிஸ்திரியும், அவரது நண்பரும் சம்பவ இடத்திலேயே பலியானதுதான் அதிர்ச்சியான விஷயம். அதற்கு காரணம், அவர்கள் இருவரும் சீல்ட் பெல்ட் அணியாமல் இருந்ததே என்கிறார்கள் கார் தொழில்நுட்ப வல்லுநர்கள் அத்தனை பேரும்..

  கார்களை பொருத்தவரை, மொத்த பயணிகளுக்குமே மிக முக்கியமான பாதுகாப்பு அம்சம் எதுவென்றால் , அது சீட் பெல்ட் மட்டும்தான். கோடிகளை கொடுத்து வாங்கிய கார்களில், எத்தனை ஏர் பேக்குகள் வரிசைக் கட்டி வைக்கப்பட்டிருந்தாலும், சீட் பெல்ட் போட்டால் மட்டுமே அது விரிவடையும்.

  அதை பயன்படுத்தாத காரணத்தினாலேயே, பரிதாபமாக போயிருக்கிறது சைரஸ் மிஸ்திரியின் உயிர் ஆடி காராக இருந்தாலும், ஆம்னி வேனாக இருந்தாலும் சீட் பெல்டும், அதனுடன் தொடர்புடைய ஏர் பேக்குகளும் அவசியம் என்பதைச் சொல்கிறது சைரஸ் மிஸ்திரியின் மரணம்.
  Published by:Srilekha A
  First published:

  Tags: Mercedes benz, TATA

  அடுத்த செய்தி