முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / மாருதி சுஸுகி புக் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் கிடைப்பது தாமதம் ஆகலாம்..!

மாருதி சுஸுகி புக் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் கிடைப்பது தாமதம் ஆகலாம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாருதி சுஸுகி கார் தொடர்பான வாடிக்கையாளர்களின் விசாரணைகள் 2 சதவீதமும், புக்கிங் 1 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று சஷாங் கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை தற்போதைய மாதத்தில் 4.05 லட்சமாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மாருதி சுஸுகி வாகனங்களை புக்கிங் செய்து வரும் நிலையில், உடனுக்குடன் டெலிவரி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. முன்னதாக ஜிம்னி மற்றும் ஃபிராங்ஸ் ஆகிய எஸ்யூவி வகை கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. அந்த வாகனங்களை அதிகமான வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு விரும்பும் நிலையில், அந்நிறுவனத்தின் டெலிவரி நிலுவை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

ஜிம்னி காரை 11,000 வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்துள்ளனர். அதே சமயம் ஃபிராங்க்ஸ் காருக்கு 4,000 வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டின்படி 3.63 லட்சம் வாகனங்களை டெலிவரி செய்ய வேண்டியிருந்தது. இதில் 1.19 லட்சம் கார்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார்களாகும்.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு முதன்மை செயல் அதிகாரி சஷாங் ஸ்ரீவத்ஸவா கூறுகையில், “தற்போதைய சூழலில் எங்கள் நிறுவனத்தில் 4,05,000 புக்கிங் நிலுவையில் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம் என்றால் எங்களிடம் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் புக்கிங் மற்றும் வாகன விசாரிப்புகள் தொடர்ந்து கூடுதலாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாருதி சுஸுகி கார் தொடர்பான வாடிக்கையாளர்களின் விசாரணைகள் 2 சதவீதமும், புக்கிங் 1 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் சஷாங் கூறினார். இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சி - 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிம்னி மற்றும் ஃபிராங்க்ஸ் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதில், ஆச்சரியம் என்னவென்றால் இந்த இரண்டு மாடல்களுக்குமான விலையை மாருதி நிறுவனம் இன்னமும் அறிவிக்கவில்லையாம்!

உற்பத்தி பாதிப்பு : முன்னதாக, கார்களுக்கான செமி கண்டக்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. குறிப்பாக, 3ஆவது காலாண்டில் மாருதி நிறுவனத்தின் உற்பத்தி இலக்கில் 46 ஆயிரம் வாகனங்கள் தயார் செய்யப்படவில்லை. அதே சமயம், செமி கண்டக்டர்கள் பற்றாக்குறை தீர்ந்தவுடன், உற்பத்தி பெருகும் நிலையில் புக்கிங் நிலுவை குறையும் என்று மாருதி நிறுவனம் கூறியிருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டில் 13.64 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம் கடந்த ஆண்டில் 15.76 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது.

First published:

Tags: Automobile, Maruti Suzuki