கான்பூரை தளமாக கொண்ட லோஹியா மோட்டார்ஸ் லிமிடெட் (LML - Lohia Motors Ltd) கடந்த ஆண்டு செப்டம்பரில் எலெக்ட்ரிக் வாகனங்களுடன் மார்க்கெட்டில் மீண்டும் நுழைவதற்கான திட்டங்களை அறிவித்து இருந்தது. இந்நிலையில் LML Electric அதன் இரண்டாவது வரவில் அடுத்த ஆண்டு மூன்று தயாரிப்புகளை வெளியிடும் திட்டத்தை இப்போது அறிவித்துள்ளது. மேலும் புதிய உற்பத்தி ஆலையை அமைப்பது உட்பட வணிகத்தில் சுமார் ரூ.350 கோடி செய்ய நிறுவனம் திட்டமிட்டு உள்ளது என்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். லோஹியா மோட்டார்ஸ் லிமிடெட் முன்பு இத்தாலியின் Piaggio மற்றும் C Spa-வுடன் இணைந்து வெஸ்பா ஸ்கூட்டரை தயாரித்தது நினைவிருக்கலாம்.
ஹைப்பர் பைக், இ-பைக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய மூன்று EV தயாரிப்புகளை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட உள்ளதாகவும், 2023 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்த 3 தயாரிப்புகளையும் அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறது. LML தலைமை செயல் அதிகாரி யோகேஷ் பாட்டியா பேசுகையில், ரூ. 350 கோடி அளவிலான எங்களது முதலீடு தயாரிப்பு விரிவாக்கம், புதிய உற்பத்தி ஆலை மற்றும் ஒத்துழைப்பு போன்றவற்றிற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
எங்களது நிறுவனம் சில பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து பல முதலீட்டு திட்டங்களை பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகன ஆலையை அமைக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது என்றார்.
LML Electric இதுவரை தாய் நிறுவனமான SG கார்ப்பரேட் மொபிலிட்டி மூலம் நிதி ஆதரவை பெற்றது என்பதை குறிப்பிட்ட பாட்டியா, நிர்வாகம் முன்மொழிவுகளைப் பற்றி விவாதித்ததாகவும், ஆனால் வருங்கால முதலீட்டாளர்கள் எங்கள் தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் முழுமையாக வெளியிடப்பட்டவுடன் அவற்றின் அனைத்து அம்சங்களையும் முதலில் மதிப்பீடு செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். எனவே அவர்களிடம் நேரம் கேட்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
மேலும் பேசி உள்ள பாட்டியா, புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்காக இதுவரை 2-3 மாநிலங்களிலிருந்து நிலத்திற்கான முன்மொழிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். அவை மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். LML Electric நிறுவனம், அதன் மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிக்க இந்தியாவில் ஹார்லி-டேவிட்சனின் முன்னாள் உற்பத்தி பங்குதாரரான Saera Electric Auto-வுடன் ஒரு பார்ட்னர்ஷிப்பில் நுழைந்துள்ளது. Saera Electric Auto மாதத்திற்கு 18,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
Also see... அடுத்த தலைமுறைக்காக கூட்டு சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் - மகேந்திரா
இதனிடையே அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள 3 தயாரிப்புகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை முக்கியமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளை இலக்காகக் கொண்டதாக இருக்கும் என்று பாட்டியா கூறினார். LML Electric நிறுவனமானது, நாட்டில் மின்சார வாகனங்களை அதிகரிக்க தேவைப்படும் முக்கிய காரணிகளில் ஒன்றான சார்ஜிங் இன்ஃப்ராவையும் பார்த்து வருவதாக பாட்டியா கூறினார். நாட்டின் 835 மாவட்டங்களில் LML studio-cum ஃபிரான்சைஸை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது வாடிக்கையாளர்களின் வாகனம் தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் LML சென்டராக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.