நாட்டின் முதல் சி.என்.ஜி டிராக்டர் அறிமுகம்! விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

நாட்டின் முதல் சி.என்.ஜி டிராக்டர்

சிஎன்ஜிக்கு மாற்றப்படும் டிராக்டர்கள், டீசல் இன்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ சக்தியை வெளிப்படுத்தும் என்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது.

  • Share this:
டீசல் என்ஜினில் இயங்கும் நாட்டின் முதல் சி.என்.ஜி (இயற்கை எரிவாயு) டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த டிராக்டரை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை எரிபொருள் செலவு தொகை குறையும் எனக் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலக்டிரிக் வாகனங்கள் மற்றும் குறைவான எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் முதல் முறையாக டீசலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்ட டிராக்டரை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வாகனத்தை பயன்படுத்தும் விவசாயிகள் எரிபொருளுக்காக செலவிடும் தொகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும் என கூறியுள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர், வி.கே.சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கியமான 6 விஷயங்கள்:

1. Rawmatt Techno Solutions மற்றும் டோமசெட்டோ அச்சிலே இந்தியா Tomasetto Achille India ஆகியவை கூட்டாக இணைந்து டீசல் டிராக்டரை, சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றியுள்ளன. சிஎன்ஜி எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், இந்த டிராக்டரை இயக்குவதற்கான செலவு குறையும். எனவே விவசாயிகளின் வருமானம் உயரும். கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் இந்த டிராக்டர் முக்கிய பங்கு வகிக்கும்.

நாட்டின் முதல் சி.என்.ஜி டிராக்டர்


2. டிராக்டரை சிஎன்ஜிக்கு மாற்றுவதால் விவசாயிகளுக்கு இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முதலில், சிஎன்ஜிக்கு மாற்றப்படும் டிராக்டர்கள், டீசல் இன்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ சக்தியை வெளிப்படுத்தும் என்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. இரண்டாவது, டீசல் இன்ஜினுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி டிராக்டர்களில் ஒட்டுமொத்த உமிழ்வு 70 சதவீதம் குறைவாக இருக்கும். மூன்றாவது, டீசலுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி எரிபொருளின் விலை மிகவும் குறைவு என்பதால், எரிபொருள் செலவை விவசாயிகள் நன்கு கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க முடியும்.

3. சந்தையில் ஒரு லிட்டர் டீசல் விலை ஏறத்தாழ 77 ரூபாயாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் முடிவைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும் என்பதால், விலை ஏறவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால், ஒரு கிலோ சி.என்.ஜி.விலை 42 ரூபாய்க்கு கிடைப்பதால், சி.என்.ஜி டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு எரிபொருள் செலவு வெகுவாக குறையும்.

4. சிஎன்ஜியானது மிகவும் சுத்தமான மாற்று எரிபொருட்களில் ஒன்றாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்தது. டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து உள்ள நிலையில், இதுபோன்ற வாகனங்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், இந்த டிராக்டர்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் சலுகை மற்றும் மானியங்கள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன

5. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை போல், சிஎன்ஜி வாகனங்களும் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் மீது மக்களின் கவனம் திரும்பி வருகிறது. எனவே சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மிகவும் ஆர்வமாக உள்ளன.

6. சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு பின்னடைவாக இருப்பது என்னவென்றால், எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது ஆகும். இதனால், சிஎன்ஜி வாகனங்களுக்கு மாறும் விருப்பம் கொண்ட விவசாயிகளுக்கும், எரிபொருள் நிலையங்கள் இல்லாதது தடையாக உள்ளது. இதற்கு விரைவில் மத்திய அரசு தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
Published by:Arun
First published: