முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

Electric Vehicles | இந்தியாவின் பல இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றி எரிந்த விபத்திற்கு அதன் பேட்டரி தரம் தான் காரணம் என்பது தெரியவந்ததை அடுத்து மத்திய அரசு தடாலடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

  • Last Updated :

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதம் மிகப்பெரிய சோதனைக்காலமாக மாறியது. ஓலா, ஓகினவா, ஏத்தர், ப்யூர் இவி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றன. கார், பைக் போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களை விட ஸ்கூட்டர்களை மக்கள் அதிக அளவில் வாங்கிய நிலையில், திடீரென எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறியது.

கடந்த மார்ச் மாதம் வேலூர் மாவட்டத்தில் ஒகினவா எலெக்டரிக் ஸ்கூட்டர் இரவில் சார்ஜ் ஏறும் போது வெடித்து தீப்பிடித்ததில் தந்தை மற்றும் மகள் பலியாகினர். புனேவில் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் தீ பிடித்தது. ஆந்திரா மாநிலத்தில் 80 வயது முதியவர் ஒருவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் உயிரிழந்தார். இதேபோல் விஜயவாடாவில் 40 வயது நபர் ஒருவர் பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் வெடித்து உயிரிழந்தார்.

இதனால் மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான நம்பிக்கையை இழந்திருந்த நிலையில், ஏப்ரல் மாதம் நாசிக்கில் ஜிஜேந்திரா இவி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் ஏற்றி வரப்பட்ட கண்டெய்னரிலேயே தீ பிடித்தது. இதில் 20 எலெக்ட்ரிக் வாகனங்கள் தீயில் கருகியது பேரதிர்ச்சியை கொடுத்தது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானவை இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் எழ ஆரம்பித்தது. இப்படி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடுத்தடுத்து தீ விபத்துக்குள்ளானதால் மத்திய அரசு விசாரணையை தொடங்கியது.

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் ராணுவ தளவாடங்களை ஆய்வு செய்யும் குழு, எரிந்து போன எலெக்ட்ரிக் வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியது. இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஓலா, ஒகினோவா, ஜிஜேந்திரா, ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ் உள்ளிட்ட அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பேட்டரிகளின் அமைப்பு மற்றும் தரம் குறைவாக இருப்பதை கண்டறிந்தது.

Also Read : Ola-வின் S1 Pro, Ather-ன் 450 Plus, TVS-ன் iQube... இந்த மூன்றில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.?

உற்பத்தி செலவுகளை குறைப்பதற்காக தரம் குறைவான பேட்டரிகளை அந்நிறுவனங்கள் தங்களது வாகனத்தில் பொருத்தியதை கண்டறிந்த டிஆர்டிஓ குழு விரிவான அறிக்கையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது. டிஆர்டிஓ- வில் உள்ள தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (CFEES) தனது உண்மை கண்டறியும் அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது, இது EV உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை வரவழைத்து, DRDO அறிக்கையின் கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது இந்த ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ), ஏப்ரலில் இ-ஸ்கூட்டர்கள் வெடித்தது தொடர்பாக ப்யூர் இவி மற்றும் மற்றும் பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Also Read : Electric Scooter தீப்பிடிப்பது அரிதானது தான்.. எதிர்காலத்திலும் நிகழலாம் - ஓலா எலெக்ட்ரிக் சிஇஓ தகவல்!

இந்நிலையில் நிதி ஆயோக் அமைப்பு எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கு BIS தரச்சான்று வழங்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் அளவு, செயல் திறன், செல்களின் எண்ணிக்கை மற்றும் அதன் சைஸ், பேட்டரியின் கொள்ளளவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தகுதி சான்றிதழ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Central government, Electric bike, India