இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஒரு பைக்கின் வெற்றியை தீர்மானிக்கும் காாரணிகளில் அந்த பைக் தரும் மைலேஜ் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தற்போது பெட்ரோல் விற்கும் விலையில் நடுத்தர மக்களின் விருப்பத் தேர்வு என்பது அதிக மைலேஜ் தரும் பைக்குகள்தான். அப்படி அதிக மைலேஜ் தரும், மிகவும் ஸ்டைல் லுக்குடன் ஒரு பைக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் விடவா போகிறோம். அப்படி ஒரு பைக்கைத் தான் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
அதற்கான தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஹோண்டா நிறுவனம். ஆம் வரும் 15 ஆம் தேதி தனது புதிய மாடலை அறிமுகம் செய்கிறது ஹோண்டா. புதிய மாடலின் பெயர் என்ன? தோற்றம் எப்படி இருக்கும் என எந்த விபரமும் தெரியாத நிலையில் அந்த பைக் தொடர்பான இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த பைக்கின் முதல் டீசர் மூலம் நமக்கு பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டீசர் மூலம், இந்த புத்தம் புதிய பைக்கின் டிசைன் எப்படி இருக்கும்? என்பது நமக்கு ஓரளவிற்கு தெரியவந்துள்ளது. புதிய 100 சிசி பைக்கின் அறிமுகம் தொடர்பாக ஹோண்டா நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அழைப்பிதழில், 'Gear Up For A Shining Future' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கையில் ஹோண்டா ஷைன் பைக்கின் அப்டேட் வெர்சனாக புதிய பைக் இருக்கலாம் எனத் தெரிகிறது.
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டீசர் வீடியோ அதை கிட்டத்தட்ட உறுதி செய்வது போல் உள்ளது. இந்த வீடியோவில் புதிய 100 சிசி பைக்கின் டிசைன் ஸ்கெட்ச் காட்டப்பட்டுள்ளது. 'ஷார்ப்' ஆன தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப், நேர்த்தியான தோற்றம் கொண்ட சைடு வியூ மிரர்கள் ஆகியவை இடம்பெற்றிருப்பதை இந்த டிசைன் ஸ்கெட்ச்சில் நம்மால் காண முடிகிறது. இவை தவிர, தட்டையான சிங்கிள் பீஸ் சீட், பின் இருக்கையில் அமர்பவர் பிடித்து கொள்வதற்காக ஸ்பிளிட் க்ராப் ரெயில் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றையும் ஆகியவற்றையும் கூட இந்த டிசைன் ஸ்கெட்ச்சில் காணலாம்.
புத்தம் புதிய இந்த பைக் 100 சிசி திறன் கொண்டதாக இருக்கும். இதன் பவர் அவுட்புட் 8 பிஹெச்பி மற்றும் 8 என்எம் ஆக இருக்கலாம். அதே சமயம் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்பட பல்வேறு வசதிகளையும் இந்த புதிய பைக் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆரம்ப நிலை கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் ஆகும். எனவே இதன் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும். அனேகமாக இந்த பைக்கின் விலை 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். குறைவான விலை, அட்டகாசமான வசதிகள் ஆகிய சிறப்பம்சங்களுடன், இந்த பைக்கின் இன்ஜின் ஹோண்டா நிறுவனத்திற்கே உரித்தான வகையில் சிறப்பான ரீஃபைன்மெண்ட்டை பெற்றிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல மைலேஜ் வழங்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் இந்த இன்ஜினை உருவாக்கியுள்ளது. அதிக எரிபொருளை சேமிக்க வேண்டும் என்பதற்காக இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய 100 சிசி பைக் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கிற்கு நேரடி போட்டியாக ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை களத்தில் இறக்குகிறது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய 100 சிசி பைக்கின் வருகை, இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.