இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 5வது தலைமுறை Honda City கார்!

Honda City

குஜராத்தில் உள்ள பிபாவவ் துறைமுகம் மற்றும் சென்னையில் உள்ள என்னூர் துறைமுகத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு முதல்கட்டமாகமாக கார்களை அனுப்புவதன் மூலம் 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி ஏற்றுமதியை ஹோண்டா நிறுவனம் தொடங்கவுள்ளது.

  • Share this:
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி கார்களை 'Left Hand Drive' நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போவதாக ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா (HCIL) கடந்த ஜன.28 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத்தில் உள்ள பிபாவவ் துறைமுகம் மற்றும் சென்னையில் உள்ள என்னூர் துறைமுகத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு முதல்கட்டமாகமாக கார்களை அனுப்புவதன் மூலம் 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி ஏற்றுமதியை ஹோண்டா நிறுவனம் தொடங்கவுள்ளது. தற்போது வரை, ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது 'ஆல் நியூ சிட்டி' வாகனத்தின் 'ரைட் ஹேண்ட் டிரைவ்' மாடல்களை தென்னாப்பிரிக்காவிற்கும், அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டானுக்கும் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ககு நகனிஷி கூறியதாவது, "தபுகாராவில் (ராஜஸ்தான்) ஒரு விரிவான உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதியை உருவாக்குவதில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். இது வலது கை மற்றும் இடது கை ஆகிய இரண்டு வகை இயக்க மாதிரிகளையும் உற்பத்தி செய்யக்கூடியது.

Honda City


இது உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோருக்கான தேவையை நிர்வகிக்க எங்களுக்கு உதவுகிறது" என்று கூறினார். மேலும் "மேக் இன் இந்தியா" மீதான எங்கள் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப உற்பத்தி வசதி உள்ளது. ஆலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா அதன் அனைத்து மாடல்களையும் 90 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளூர்மயமாக்கலுடன் தயாரித்து வருகிறது. மேலும் நாட்டில் ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் எங்களை ஒருங்கிணைக்கிறது என அவர் மேலும் கூறினார்.

ஐந்தாம் தலைமுறை மாடலாக வெளியான ஹோண்டா சிட்டி கார் தோற்றத்திலும் பிரம்மாண்டமாக உள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

Honda City


புதிய ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன. மேலும், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஎஃப்டி எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் லைட், பிரேக் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது, இது லெப்ட் மற்றும் ரைட் ஹாண்ட் டிரைவ் அம்சத்துடன் தயாரிக்கப்படுவது இதன் கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அமேஸ், டபிள்யூஆர்-வி மற்றும் சிட்டி உள்ளிட்ட மாடல்களை நேபாளம், பூட்டான், தென்னாப்பிரிக்கா மற்றும் எஸ்ஏடிசி நாடுகளுக்கு ஹோண்டா சார்ஸ் இந்தியா ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: