எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு தேவைப்படும் சார்ஜிங் நிலையங்களும் முழு முனைப்போடு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஹீரோ நிறுவனம் ஒரு லட்சம் EV சார்ஜிங் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், பெங்களூருவில் இயங்கி வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சார்ஸர் (Charzer) உடனான பார்ட்னர்ஷிப்புடன் முதல் கட்டமாக 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் முன்னிலையில் வகிக்க இருக்கிறது, அதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அனைவரும் உணர்வதற்கு முன்னதாகவே ஹீரோ நிறுவனம் அதற்கான வேளைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்றமாதிரியான இன்ஃப்ராஸ்ரக்ச்சர் வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்த நிறுவனம், தற்போது EV ஸ்கூட்டர்களுக்கான சார்ஜிங் நிலையங்களையும் அமைத்து வருகிறது.
நாடு முழுவதும், 30 நகரங்களில் ஒரு ஆண்டுக்குள் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். பொது சார்ஜிங் நிலையங்கள் மட்டுமல்லாமல், முதல் கட்டப்பணியில் ஹீரோ எலக்ட்ரிக் டீலர்ஷிப்களிலும் சார்ஜர்கள் அமைக்கும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும் சைன் போர்டுகளைப் போல, எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய, சார்ஸர் மொபைல் ஆப் மற்றும் ஒரு வலைத்தளம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். எலக்ட்ரிக் வாகனங்கள் இனி ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் என்று கருதப்படும் நேரத்தில், இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு பல விதமான ஆதரவும் தேவைப்படுகிறது. அவற்றில் முக்கியமான இரண்டு, எலக்ட்ரிக் வாகனங்களில் பெர்ஃபார்மான்ஸ் மற்றும் வாகனத்திற்கான சார்ஜிங் நிலையங்கள்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நன்றாக செயல்படுகிறது ஆனால் தேவையான சார்ஜிங் நிலையங்கள் இல்லை என்பது EV க்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துவிடும். இதை முன்கூட்டியே அறிந்த ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், வாகனங்கள் அறிமுகம் ஆகத் தொடங்கும் முன்னரே, அதற்கான சப்போர்ட் அமைப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
Also read... Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
முதல் கட்ட திட்டத்தில், அடுத்த ஒரு ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக பத்தாயிரம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் வேளைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்று கடந்த செவ்வாய் அன்று ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்தது. இந்த முழு பணியும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிப்பதற்கு திட்டம் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சரில் கவனம் செலுத்தி வரும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், ஏற்கனவே லூதியானாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது. மார்ச் 2022 க்குள், ஆண்டுக்கு 5 லட்சம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திட்டம் இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.