சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவதற்கு காரணம், பெரும்பாலான மக்களின் கவனக்குறைவு ஆகும். பாதுகாப்பு விதிகள் தெரியாமலும், தான்தோன்றி தனமாக வாகனங்களை ஓட்டுவதுமே நொடிப் பொழுதில் விபத்துகளுக்கு வழிவகை செய்கின்றன. பாதுகாப்பு விதிகளை அறியாமல் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுபவர்களால், அவர்களுக்கு மட்டுமின்றி சாலைகளில் பயணிக்கும் அப்பாவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது.
நாம் ஒரு வாகனத்தை இயக்குவதற்கு மெக்கானிக்கல் ரீதியாக எந்த அளவுக்கு புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு பாதுகாப்பான பயணங்களுக்காக போக்குவரத்து விதிகள் குறித்து தெரிந்து கொள்வதும் அவசியமாகும். டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்பவர்கள் முதலில் சாலையில் உள்ள போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகள் குறித்து போக்குவரத்து துறை சார்பில் தனி எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.
ஒழுங்குமுறை விதிகள், எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள் என்ற அடிப்படையில் போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : முதல் முறையா கார் வாங்கியிருக்கீங்களா?... பயனுள்ள பராமரிப்பு டிப்ஸ்கள் இதோ...
ஒழுங்குமுறை விதிகள் : இது சாலைகளில் வாகனங்கள் எந்தவித சிக்கலும் இன்றி இயல்பாக இயங்குவதற்கு வழிமுறைகளை வழங்குவதாகும். வாகனங்களை ஓட்டும் போது இந்த விதிகளை கடைபிடிக்க தவறினால் போக்குவரத்து காவலர் உங்களுக்கு அபராதம் விதிக்க கூடும்.
வாகனங்களை நிறுத்தும் இடம், திருப்புவதற்கு தடை, முந்தி செல்வதற்கு தடை, வாகனங்களுக்கான நோ பார்க்கிங் இடங்கள் ஆகியவற்றுக்கான குறியீடுகள் மற்றும் வேகக் கட்டுப்பாடு குறியீடு மற்றும் குறிப்பிட்ட சாலைகளில் கட்டாயமாக திரும்புதல் ஆகிய விதிகளை உள்ளடக்கியது ஒழுங்குமுறை விதிகள் ஆகும்.
எச்சரிக்கை குறியீடு : ஒரு சில இடங்களில் சாலையோரத்தில் உள்ள பலகையில் சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவமும், அதன் நடுவே சிறிய கருப்பு புள்ளியும் இடம்பெற்றிருக்கும். இந்த பலகை இருந்தால் அப்பகுதி என்பது வாகனங்களை இயக்குவதற்கு ஆபத்தான இடம் என்பதைக் குறிக்கும்.
வளைவு, வழித்தடங்கள் மாறுதல், நடைபாதை கிராசிங், சைக்கிள் கிராசிங் மற்றும் வழுக்கும் வாய்ப்பு உள்ள சாலைகள் உள்ளிட்ட எச்சரிக்கைகள் இதில் அடங்கும். இந்த குறியீடுகள் மீறப்படும்போது அபராதம் விதிக்க வழி இல்லை என்றாலும் கூட, அனைவரின் பாதுகாப்பு கருதி இவற்றை கடைபிடிப்பது நமது கடமையாகும்.
தகவல் பலகை : சாலை செல்லும் இடம், தொலைவு, மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள், ஓய்வு எடுக்க கூடிய பகுதிகள் போன்ற தகவல்களைக் கொண்டதாக தகவல் பலகைகள் இடம்பெற்றிருக்கும் சாலைகளில் பயணிக்கும் போது இந்த பலகைகளை கவனித்தவாறு பயணம் செய்தால் நாம் எங்கு ஓய்வு எடுக்க வேண்டும், எங்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்பது குறித்து நாம் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.