எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்கிறதா.? இதுதான் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் துறை பெரிய வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கான தடையாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது விற்பனையாகும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்கள் விலை உயர்ந்தவை என்பதே வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக இருக்கிறது.
இத்தகைய சூழலில், இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் 3 சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் தான், தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
தற்போதைய மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு மிக குறைந்த விலையில் கிடைக்க கூடிய காராக Tata Tigor இருக்கிறது. இதன் விலை ரூ.10 லட்சம் ஆகும். அதே சமயம், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்க கூடிய காராக மஹிந்திரா இ20 பிளஸ் கார் இருந்த போதிலும், தற்போது அது விற்பனைக்கு வருவதில்லை.
இதற்கிடையே, மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதலாவது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எலெக்ட்ரிக் காரை குறைவான விலையில் கொடுப்பது என்பது மாருதி நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் வேறெந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கும் சவால் மிகுந்த காரியமாகவே இருக்கும்.
விலை உயர்வுக்கு பேட்டரி டெக்னாலஜி தான் காரணம்
ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் கிடைப்பதற்கு மாபெரும் தடையாக இருப்பது, ஏற்கனவே இருக்கும் பேட்டரி டெக்னாலஜிக்கான கூடுதல் விலை தான். எலெக்ட்ரிக் கார்களில் தற்போது லித்தியம் ஐயன் வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. எலெக்ட்ரிக் காரின் மொத்த விலையில் சுமார் 40 சதவீத தொகை இந்த பேட்டரிக்கே போய்விடுகிறது.
Also Read : புதிய டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் நிசான்!
வெகு விரைவில் பேட்டரி விலை குறைவதற்கான சாத்தியம் எதுவும் தென்படவில்லை. இதனால், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில், நடுத்தர மாடல் கார் ஒன்றை அறிமுகம் செய்வது, கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. லித்தியம் ஐயன் பேட்டரி விலை உயர்வு காரணமாகவே எலெக்ட்ரிக் கார்களின் விலையும் அதிகமாக உள்ளது.
தேவையும் பற்றாக்குறையும்
எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித்துள்ள நிலையில், லித்தியம் பேட்டரிக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது, லித்தியம் தாதுவை கொள்முதல் செய்வது அதிக செலவு கொண்டதாக இருக்கிறது. 2022ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ஒரு டன் லித்தியம் என்பது 78,000 டாலர்களுக்கு விற்பனையாகி இருக்கிறது.
Also Read : டாடா கார்களுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி..
சின்ன கார் தீர்வாக அமையுமா
எலெக்ட்ரிக் காரின் அளவை குறைப்பதுடன், பேட்டரியின் அளவையும் குறைத்து விட்டால் ரூ.10 லட்சத்திற்கு குறைவான விலையில் கார் விலை நிர்ணயம் செய்யப்படலாம். ஆனால், பேட்டரி அளவை குறைத்தால், அதிக மைலேஜ் கிடைக்காது என்ற சிக்கல் நீடிக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதுவே, இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அதிக அளவில் வந்தால், இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric Cars, India