குதிரை வண்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட நவீன தானியங்கி கார்!

news18
Updated: October 2, 2018, 10:34 PM IST
குதிரை வண்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட நவீன தானியங்கி கார்!
இஇஸட் அல்டிமோ தானியங்கி கார்
news18
Updated: October 2, 2018, 10:34 PM IST
ரெனால்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஓட்டுனர் இல்லா தானியங்கி கார், சர்வதேச ஆட்டோமொபைல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஆளில்லா கார்களை டெஸ்லா, கூகுள் போன்ற நிறுவனங்கள் போட்டிபோட்டு வடிவமைத்து வருகின்றன. அவர்களுடன் ரெனால்ட் நிறுவனமும் மல்லுக்கட்டி வருகிறது. பிரான்சை சேர்ந்த ரெனால்ட் கார் உற்பத்தி நிறுவனம், ஏற்கெனவே, இஇஸட்- கோ மற்றும் இஇஸட்- புரோ ஆகிய இரு தானியங்கி கார்களை வடிவமைத்துள்ளது.

மூன்றாவதாக, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் ஆட்டோ ஷோவில், பிரீமியம் ரோபோ டாக்சி எனப்படும் இந்த இஇஸட் அல்டிமோ, தானியங்கி கார் காட்சிப்படுத்தப்பட்டது.


பழங்கால குதிரை வண்டியை மனதில் வைத்து அதன் நவீன வடிவமாய் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அல்லது ஓட்டலில் இருந்து விருந்தினர்களை அழைத்து வருவதற்கேற்ப இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதலர்கள் விரும்பும் வகையில் ரம்மியமான உட்புறச்சூழல் நிலவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரெதிரே முகம் பார்த்து அமரும் வகையிலும் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

19.7 அடி நீளமுள்ள இந்தக் கார், மற்ற வாகனங்களின் மீது மோதாமல் பாதுகாப்பான தொலைவில் பயணம் செய்யும் வகையிலும், சாலையில், வேகத்திற்கேற்ப தடம் மாறிக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிக்னலில் தாமாக நின்று, தேவைப்படும் திசையில் திரும்பிச் செல்லும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறம், உயர் ரக மரப்பலகையாலும், தரையில் மார்பிளும் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காரை, 2022-க்குள் வர்த்தக ரீதியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
First published: October 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...