இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு தற்போதுதான் ஆரம்பித்துள்ளது. எலக்ட்ரிக் பைக்குகள் மட்டுமின்றி கார்களும் தயாரிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தாய்வான் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஃபாக்ஸ்கான் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை கடந்த திங்களன்று அறிவித்தது.
உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபாக்ஸ்கான் முதல் முறையாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் காலடி எடுத்து வைப்பதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவரான லியூ யங்-வே உலக அளவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தித் திட்டங்களை வெளியிட்டார்.
எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தபோது இந்தியா, பிரேசில் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தன்னுடைய உற்பத்தி ஆலைகளை தொடங்க வேண்டும் திட்டம் இருப்பதாக லியூ கூறினார். உற்பத்தி ஆலைகளைப் பற்றிய மற்ற விவரங்களை வெளிப்படுத்துவதில் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்தியா மற்றும் பிரேசில் உற்பத்தி ஆளை பற்றிய திட்டத்தை விரிவாக கூற இயலாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ஐரோப்பாவில் இதை விரைவாக செயல்படுத்த முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எந்த இடத்தில் துவங்க இருக்கிறோம் என்பதை இப்போது என்னால் கூற இயலாது” என்று நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். ஜெர்மானிய கார் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் விருப்பம் உள்ளதாகவும், ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.
Must Read | புக்கிங் ஓபன் செய்த 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த MG Astor கார்கள்!
உலகின் மிகப்பெரிய ஐஃபோன்கள் அசெம்பிள் நிறுவனமான ஃபாக்ஸ்கான் மூன்று எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம், முதல் கட்டமாக, 3 எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக தெரிவித்திருந்தது. இவை அனைத்துமே பேட்டரியில் இயங்கும் கார்களாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சொந்தமான பிராண்டில் விற்பனை செய்ய விரும்பவில்லை என்றும் வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமான ஆட்டோமொபைல் திட்டங்களை உருவாக்க இருப்பதாகவும் கூறியது.
மாடல் C SUV மற்றும் மாடல் E செடான் என்ற இரண்டு சொகுசு கார்களை அற்புதமான அம்சங்களுடன் உற்பத்தி செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார்களில், ரேஸ் கார்களில் இருப்பது போன்ற அக்சிலரேஷன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது மாடலாக, மாடல் T பஸ் ஒன்றை தயாரிக்க இருப்பதாகக் கூறியுள்ளது. ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், 400 கிமீ வரை செல்ல முடியும் என்றும், இந்த வாகனத்தின் டாப் ஸ்பீட் 120 kmph என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கான முதற் கட்ட பணியில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முழுமூச்சாக ஈடுபட்டு வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மற்றும் உற்பத்தி பற்றி அந்நிறுவனம் அளித்துள்ள தகவலில், ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஏற்கனவே, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான அமெரிக்க ஸ்டார்ட்அப், ஃபிஸ்கர் நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் PTT PCL நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், டெஸ்லாவின் போட்டியாளரான லார்ட்ஸ்டவுன் மோட்டார்களுடன் இணைந்து அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய ஒரு உற்பத்தி ஆலையை வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.