பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி வெடித்து தீப்பிடித்து எரிவதும், சில உயிர்கள் பலியாகி உள்ளதும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவது குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் தீப்பிடித்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே ஒரு தனியார் நிறுவன நிகழ்சியில் பேசி இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பவிஷ் அகர்வால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தீ விபத்துகள் என்பது அரிதானது ஆனால் எதிர்காலத்தில் இது போன்ற சில சம்பவங்கள் நடக்க சாத்தியம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஜப்பானின் சாஃப்ட் பேங்க் குழுமத்தின் ஆதரவுடன் இயங்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 1,400-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெற்றுள்ளது. தீ விபத்திற்கான காரணத்தை ஆராய வெளியில் இருந்து நிபுணர்களை நியமித்துள்ளது.
இந்நிலையில் தான் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓலா எலெக்ட்ரிக்கின் தலைமை நிர்வாகி பவிஷ் அகர்வாலிடம் செய்தியாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து குறித்து எதிர்காலத்திலும் இதே போன்ற நிகழ்வுகள் நடக்குமா என்று கேட்டனர். அதற்கு நடக்கலாம் என்று குறிப்பிட்டு, "ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறும்" என்று பதில் அளித்து உள்ளார். எங்கள் உறுதிப்பாடு என்னவென்றால், ஏற்படும் ஒவ்வொரு சிக்கலையும் நாங்கள் பகுப்பாய்வு செய்வதை உறுதிசெய்வோம். தயாரிப்பில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவற்றை நாங்கள் சரி செய்வோம் என்றார்.
Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்
மேலும் பேசிய பவிஷ் அகர்வால் வாகனத் துறையில் தீ பாதுகாப்பு என்பது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரந்த பிரச்சினையாகும். EV தொழிற்துறையை விட பெட்ரோல் எரிபொருள் வாகனங்களுக்கு தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் அதிகம் தேவை என்று குறிப்பிட்டார். பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், பெட்ரோல் அடிப்படையிலான ஸ்கூட்டர்கள் எலெக்ட்ரிக் மாடல்களுடன் ஒப்பிடும் போது அதிகம் தீப்பிடித்துள்ளன. எனவே இந்த பிரச்சனை எலெக்ட்ரிக் பிரிவிற்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த இரு சக்கர வாகன தொழிலுக்கும் பொருந்தும் என்று பவிஷ் அகர்வால் கூறி இருக்கிறார். இதனிடையே இ-ஸ்கூட்டர் தீ விபத்துகள் பற்றிய அரசு விசாரணையின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி செல்கள் மற்றும் பேட்டரி மேனேஜ்மேண்ட் சிஸ்டமில் சிக்கல் இருப்பதை வெளிப்படுத்தின. ஆனால் ஓலா நிறுவனமோ அதன் தயாரிப்பின் பேட்டரி மேனேஜ்மேண்ட் சிஸ்டமில் ஏதும் சிக்கல் இல்லை என்று கூறி உள்ளது. ஓலாவின் சுமார் 50,000 இ-ஸ்கூட்டர்களில் ஒரே ஒரு தீப்பிடிப்பு சம்பவம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில், சில சிறிய குறைபாடுகள் இருக்கலாம், ஒருவேளை செல்லில் அல்லது, வேறு எதிலாவது இருக்கலாம். அந்த சிறிய குறைபாடு சில நேரங்களில் இன்டர்னல் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தும் என்று அகர்வால் கூறி உள்ளார்.
Also Read : பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல்..
ஓலா தனது தயாரிப்புகளுக்கு தேவையான செல்களை தென் கொரியாவின் எல்ஜி எனர்ஜி சொல்யூஷனில் இருந்து இறக்குமதி செய்கிறது.அனைத்து நிறுவனங்களும் உதிரிபாகங்களை பொறுப்பான மற்றும் தரமான நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும். உதாரணமாக "தகுதியற்ற சீன சப்ளையர்களிடமிருந்து" அல்ல என்று குறிப்பிட்டு உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Ola, Scooters