மின்சார போக்குவரத்துக்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் விதமாக ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகரில் 670 மின்சார பேருந்துகளுக்கும், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத் ஆகிய பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களையும் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. மேலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக நகரங்களுக்கு இடையேயான எலக்ட்ரிக் மொபிலிட்டி கோச் பிராண்டான இன்டர்சிட்டி கோச் பிராண்டான 'NueGo' ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் 750 பிரீமியம் ஏசி மின்சார பேருந்துகளை இந்தியாவில் தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் 75க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் வழியாகவும் 100 எலெக்ட்ரிக் பேருந்துகளையும், தலைநகர் டெல்லி வழியாக 200 எலெக்ட்ரிக் பேருந்துகளையும் இயக்க உள்ளது. இதற்காக கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் நேற்று முதல் இந்திய நகரங்களுக்கு இடையிலான எலெக்ட்ரிக் மொபிலிட்டி கோச் பிராண்டான ‘நியூகோ’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் இன்டர்சிட்டி எலக்ட்ரிக் மொபிலிட்டி பிராண்டான இது, 24 நகரங்களில் மின்சார போக்குவரத்து சேவையை வழங்க உள்ளது.
முதற்கட்டமான 250 பேருந்துகள் இந்தியாவின் 24 நகரங்களை இணைக்கும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக 75 வழித்தடங்களில் பீரியம் ஏசி எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் முதல் ஆண்டிலேயே நாடு முழுவதும் சுமார் 28,000 கிலோமீட்டர்களுக்கிடையிலான பயணத்தை மின்மயமாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இத்திட்டம் மூலமாக 4,125 புதிய வேலைகளையும் கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More: OLA Electric Scooter தந்த ஆபத்தான அனுபவம் - ஸ்கூட்டரை விற்ற நபர்.. என்ன நடந்தது.?
கிரீன்செல் மொபிலிட்டியின் எம்.டி மற்றும் சி.இ.ஓ. ஆன அசோக் அகர்வால் கூறுகையில், "நியூகோ, இந்தியா குடிமக்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உலகத்தரம் வாய்ந்த பயண சேவையை அனுபவிப்பதை உறுதி செய்யும். தடையற்ற முன்பதிவு, பயணத்தின் தரம், அனுபவம், பாதுகாப்பு ஆகிய வசதிகளுடன் சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமையான பயணத்தை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக 100 மின்சார பேருந்துகளும், டெல்லி NCR வழியாக 200 மின்சார பேருந்துகளும் இயக்கப்படுவதன் மூலமாக 56,154 டன் CO2 உமிழ்வு குறைக்கப்படும் என நிபுணர்கள் கணிந்துள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதில் முன்னணியில் உள்ள கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் 25 நகரங்களில் 900 மின்சார பேருந்துகளுக்களை இயக்குவதற்காக முக்கிய நகரங்களில் உள்ள போக்குவரத்து துறைகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.