எலெக்ட்ரானிக் பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகளை இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த பொருட்களுக்காக வெளிநாடுகளை சார்ந்துள்ள நிலையை, குறிப்பாக சீனாவை சார்ந்துள்ள நிலையை குறைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது. இந்திய வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ACMA) தலைவர் சஞ்சய் கபூர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்திய வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ACMA), இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சொஸைட்டி (SIAM) மற்றும் இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் ஆகியோர் கூட்டாக இணைந்து எலெக்ட்ரானிக் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான இலக்கை அடைய பணியாற்றி வருகிறோம். எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான உற்பத்திக்கு மாபெரும் தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. ஆகவே, உள்நாட்டு உற்பத்தியை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.
ஒரு தொழில்துறை என்ற வகையில், எலெக்ட்ரானிக்ஸ் தொழில்துறையுடன் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம். ஒருங்கிணைந்த சக்திகளின் முயற்சிகளோடு, உள்நாட்டு உற்பத்தி முயற்சியை நாம் ஊக்குவிக்க முடியும் மற்றும் நாம் செய்ய வேண்டியதும் இதுதான்’’ என்று தெரிவித்தார்.
இந்தியாவின் இறக்குமதி எவ்வளவு
தற்போதைய நிதியாண்டின் முதல் அரை இறுதியில் எலெக்ட்ரானிக் உதிரி பாகங்களின் இறக்குமதியானது ரூ.79,815 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரை இறுதியில் ரூ.64,310 கோடி அளவுக்கு இருந்த இறக்குமதி மதிப்பை ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதம் அதிகமாகும்.
எலெக்ட்ரானிக் பாக இறக்குமதியை பொருத்தவரையில் ஐரோப்பியா 26 சதவீதமும், வட அமெரிக்கா 8 சதவீதமும் கொண்டுள்ள நிலையில், ஆசியா பிராந்தியம் 65 சதவீதத்தை கொண்டுள்ளது.
இந்த நிலையில் எலெக்ட்ரானிக் பாகங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பது குறித்து சஞ்சய் கபூர் கூறுகையில், “அரசும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரானிக் பாகங்களின் இறக்குமதி அதிகரித்து வரும் நிலையில், நாம் உற்பத்தியை நோக்கி நம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. ஆக, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் 40 சதவீத வாகனங்களில் சாஃப்ட்வேர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற நிலை கிடையாது. அதை மனதில் வைத்து ஆட்டோமொபைல் தொழில் துறை பயணித்து வருகிறது’’ என்று கூறினார்.
கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மோட்டார் வாகன உதிரிபாக தொழில்துறையின் மொத்த தொழில் மதிப்பு என்பது ரூ.2.65 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் அரை இறுதியை ஒப்பிடும்போது இது 34.8 சதவீதம் அதிகமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Business, Electric car