டெல்லி ஏர்போட்டில் தடுப்பூசி மையம் - 60,000 தடுப்பூசி செலுத்த திட்டம்!

டெல்லி ஏர்போட்

பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும் விதமாக தனியாக தடுப்பூசி மையத்தையும் உருவாக்கி, தடுப்பூசி செலுத்தி வருகின்றன.

  • Share this:
ஏர்போர்ட் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளிட்ட 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக டெல்லி ஏர்போட்டில் பிரத்யேகமாக தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் அலையைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் தடுப்பூசியை கொண்டு செல்வதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை சாத்தியப்படுத்தும் என்பதால், இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிக்கு எதிரான தவறான தகவல்களும், புரளிகளும் பரவியுள்ளன.

பக்கவிளைவுகள் குறித்த கவலையும் மக்களிடையே பரவியுள்ளது. இதனைப் போக்க முன்களப் பணியாளர்களும், சுகாதாரத்துறையும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்கூறி, மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பால் மக்கள் ஆர்வமாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இதேபோல், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தடுப்பூசியை விரைவாக செலுத்தி, கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரவு பகலாக போராடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும் விதமாக தனியாக தடுப்பூசி மையத்தையும் உருவாக்கி, தடுப்பூசி செலுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம், விமான நிலைய பகுதியிலேயே தடுப்பூசி மையத்தை அமைத்துள்ளது. விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சரக்கு போக்குவரத்தில் பணியாற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஊழியர்கள், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஏஜென்சிகளின் பணியாளர்கள் உள்ளிட்ட 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலில் முதன்மையாக பாதிக்கப்படக்கூடிய இடத்தில் விமான நிலையம் மற்றும் அதன் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் இருப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளவில் கோவிட் நிவாரணப் பொருட்கள் வருகை மற்றும் அனுப்புவதில் டெல்லி விமான நிலையம் ஈடுபட்டிருப்பதால், அங்கு இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தைக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Also read... கோவிட்-19: தாய் எழுதிய பாடலை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடிகை சஹானா ஷெட்டி - ரசிகர்கள் பாராட்டு!

மேலும், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமானால், மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்து காலை 10 மணி முதல் 5 மணிக்கு இடையே சென்று போட்டுக்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும், இது அசௌகரியமானது என்றும் கூறியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமானநிலையத்தில் முனையம் ஒன்றில் இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யபட்டிருப்பதாகவும், ஜூன் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: