பெட்ரோல், டீசல் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களில் இருந்து அளவுக்கு அதிகமான கார்பன் புகை வெளியேறுகிறது. இதனால், பருவ நிலை மாற்றங்கள் மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாமல், இந்த எரிபொருள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. பெட்ரோல், டீசலுக்கு மூல ஆதாரமான கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய, எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இத்தகைய சூழலில், உலகிற்கு ஒரு வரப் பிரசாதமாக, இப்போது அதிவேகமாக வளர்ந்து வருவது தான் எலெக்ட்ரிக் வாகன போக்குவரத்து ஆகும். நாம் எண்ணற்ற வகையில் மின் உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்பதாலும், இதை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழ் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்பதாலும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை உலக நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் மானியங்களும், இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
புதிதாக வாகனம் வாங்குபவர்களில் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், எல்லோர் மனதிலும் ஒரு மாபெரும் குறை இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டால் அதை நிரப்பிக் கொள்ள ஆங்காங்கே பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டால், செல்லும் இடங்களில் அதை சார்ஜ் செய்து கொள்வதற்கான பொது கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், தொலைதூர பயணங்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒத்து வராது என்ற கண்ணோட்டம் நம்மில் பலருக்கு உள்ளது.
இந்தக் கவலையை போக்கும் விதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம். சென்னை - திருச்சி - மதுரை இடையேயான 900 கி.மீ. தொலைவு கொண்ட நெடுஞ்சாலையில் இந்த நிறுவனம் 10 இடங்களில் பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை திறந்துள்ளது.
Also read... இந்தியா அரசு முன்னிலைப்படுத்தும் பசுமை ஹைட்ரஜன் பாலிசி பற்றி முக்கிய விவரங்கள்!
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடுத்தர கால அல்லது நீண்ட கால இலக்கின் அடிப்படையில், எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான 7,000 எரிபொருள் நிலையங்களில், பல்வகை எரிபொருள் நிரப்பும் மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, இதில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் இடம்பெறும். புதிய வர்த்தக வாய்ப்புகளை கொண்ட துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முதன்மை பொறுப்பு இயக்குநர் (சில்லறை வணிகம்) பி.எஸ்.ரவி இதுகுறித்து கூறுகையில், “சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100 கி.மீ. தொலைவுக்கு தலா ஒரு சார்ஜிங் நிலையம் என்ற அடிப்படையில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இதேபோன்று நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.