ஆர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடமிருந்து 500 புதிய விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்க உள்ளது. முதலில் டாடா குழுமத்திடம் இருந்து பிறகு அரசு பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டு மீண்டும் டாடா குழுமத்தின் வசமாகியுள்ளது ஏர் இந்தியா. மீண்டும் ஏர் இந்தியா டாடா குழுமம் வசமான பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது டாடா நிறுவனம். ஏர் இந்தியாவை உலகத்தரத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை டாடா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய விமானங்களை வாங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 250 ஏர்பஸ் விமானங்கள், 190 போயிங் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஏர்பஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் போயிங் நிறுவனத்துக்கும் ஏர் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த மாதம் 27ஆம் தேதி கையெழுத்தாகியுள்ளது.
ஏர் இந்தியா வாங்கவுள்ள புதிய விமானங்களின் விலை 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம். ஒரே நேரத்தில் இத்தனை விமானங்களை இதற்த முன்பு வேறு எந்த விமான நிறுவனமும் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியாவின் புதிய உரிமையாளரான டாடா குழுமும் வாடிக்கையாளர்களை ஈர்த்து விமானப் போக்குவரத்துத் துறையில் கோலோச்சும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இதற்காகவே புதிய விமானங்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது டாடா நிறுவனம். அதுமட்டுமல்லாது, தனது சேவைத் தரத்தையும் மேம்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான இந்திய வம்சாவளியினர் ஆண்டுதோறும் புதுடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற இந்திய நகரங்களுக்குப் பயணம் செய்கின்றனர்.
இவர்கள் ஏர் இந்தியாவில் பயணம் செய்தால் அது பெருமளவிலான லாபத்தை ஈட்டித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, சர்வதேச இந்தியப் பயணிகளை மீண்டும் தன்வசப்படுத்தும் முயற்சியில் டாடா நிறுவனம் இறங்கியுள்ளது.
தற்போது இந்தியாவிற்கான சர்வதேச பயணப்பாதைகளில் அரபு நாடுகளின் விமான நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ், எத்திஹாட் போன்ற அரபு விமான நிறுவனங்கள் புதிய விமானங்களை வைத்திருக்கின்றன. உயர்தரச் சேவைகளை அவை வழங்குவதிலும் இந்தியப் பயணிகளிடையே அந்த நிறுவனங்கள் பிரபலமாக உள்ளன. இவற்றுடன் போட்டியிட வேண்டுமென்றால் தனது விமானங்களையும், சேவைத் தரத்தையும் அளவில் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏர் இந்தியாவுக்கு இருக்கிறது.
Also Read : இந்தியாவில் அறிமுகமான புதிய Dzire Tour S - மைலேஜ் கேட்டா மிரண்டு போவீங்க
அதுமட்டுமல்லாது, ஆசிய நாடுகளிலும் உள்நாட்டுப் பயணங்களிலும் ஏர் இந்தியா மீண்டும் பிரபலமடைந்து ஆதிக்கம் செலுத்த புதிய விமானங்கள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு விமானப் போக்குவரத்து சேவையிலும் ஏர் இந்தியாவுக்கு இண்டிகோ விமான நிறுவனம் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
சொகுசான, உயர்தர விமானச் சேவைகளுக்கு முன்பு ஒரு காலத்தில் பேர்போன ஏர் இந்தியாவுக்கு 2000களின் நடுப்பகுதியில் நிதிப் பிரச்னை ஏற்பட்டது. அதனால் பயணிகள் மத்தியில் அதற்கு இருந்த நற்பெயர் பாதிக்கப்பட்டது. தற்போது புதிய நிர்வாகத்தின்கீழ் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஏர் இந்தியா நிறுவனம்.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air India