ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், வணிக ரீதியிலான விமானச் சேவைகள் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது. ஆனால், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாறியுள்ள நிலையில், புதிய நிர்வாகத்தின் கீழ் விமானங்கள் இயங்க உள்ளன.
ஜலன் கல்ராக் கன்சோர்டியம் (ஜேகேசி) என்ற புதிய நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மீண்டும் ஜெட் ஏர்வேஸ் சார்பில் விமானங்களை இயக்குவதற்கான அனுமதிச் சான்றிதழை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையரகத்திடம் கடந்த மே 20ஆம் தேதி பெற்றனர். என்சிஎல்டி அமைப்பு சார்பாக போக்குவரத்தை புதுப்பிக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஜேகேசி நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது.
1992இல் தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கடந்த 1992ஆம் ஆண்டில் தொழிலதிபர் நரேஷ் கோயல் நிறுவினார். அதைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டில் இருந்து விமான சேவைகள் தொடங்கின. சுமார் 27 ஆண்டுகள் விமானச் சேவைகளை வெற்றிகரமாக வழங்கி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
புதிய முதலீட்டுடன் புதுப்பொழிவு
அடுத்த சில ஆண்டுகளில் புதிதாக ரூ.1,300 கோடி முதலீடு செய்வது என்ற திட்டத்துடன் ஜெட் ஏர்வேஸ் தனது பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. உரிமையாளர்கள் புதிதாக மாறியுள்ள நிலையில், மீண்டும் மார்க்கெட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
Also Read : ஒரு கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பயன் பெற்ற மத்திய அரசின் UDAN திட்டம்
ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து புதிய நிறுவனத்திற்கு கைமாறியுள்ள 11 விமானங்களுடன் தனது பயணத்தை இந்த நிறுவனம் தொடங்குகிறது என்றாலும் கூட, வணிக பயணங்களுக்கு இந்த விமானங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய விமானங்களை வாங்குவது தொடர்பாக உற்பத்தியாளர்களுடன் இந்த நிறுவனம் இறுதிகட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்
முதல்கட்டமாக 250 ஊழியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. இவர்களில் 75 சதவீதம் பேர் முன்னாள் ஊழியர்கள் ஆவர். பைலட், பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் விமான நிறுவனத்தை ஏற்கனவே அறியப்பட்ட ஜெட் என்ற பெயரிலேயே தொடருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read : இந்தியா to வியட்நாம்... வெறும் ரூ.9க்கு விண்ணில் பறக்கலாம் - அதிரடி சலுகை
ஜெட் ஏர்வேஸ் வழித்தடங்கள்
3 ஆண்டுகளுக்கு முன்பாக சேவையை நிறுத்தும் சமயத்தில் நாட்டின் விமானப் போக்குவரத்து சந்தையில் 5இல் ஒரு பங்கை ஜெட் ஏர்வேஸ் கொண்டிருந்தது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுமார் 65 இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, விமான இயக்கங்களை முன்னெடுக்க ஏற்படும் கூடுதல் செலவு போன்றவற்றை கருத்தில் கொண்டு சேவைகளை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight, Jet Airways