10ம் வகுப்பு தேர்வு அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும்... கல்வியாளர்கள், உளவியல் ஆலோசகர்கள் வலியுறுத்தல்!

நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் சேரும் போது நோய் தொற்று பரவுவதற்கான சூழல் உள்ளது. அவர்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்வார்கள்.

10ம் வகுப்பு தேர்வு அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும்... கல்வியாளர்கள், உளவியல் ஆலோசகர்கள் வலியுறுத்தல்!
நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் சேரும் போது நோய் தொற்று பரவுவதற்கான சூழல் உள்ளது. அவர்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்வார்கள்.
  • Share this:


மாணவர்களின் மனநிலை, உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாமல், தேர்வு மையத்திற்கு மாணவர்களை வரவழைப்பது என்பது அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை எனவும், ஜுன் 1ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை அரசு கட்டாயம் திரும்பப்பெற வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், 11-ம் வகுப்பில் சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருந்தது. உயர் கல்வி, தொழிற்கல்வி என்று பல முக்கிய விவகாரங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையாக இருக்கும் காரணம் முன்வைக்கப்பட்டது.

பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்திய நிலையில், வரும் ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது முழுக்க முழுக்க மாநில அரசு சார்ந்த முடிவாக இருக்கக்கூடிய நிலையில், அரசின் இந்த நடவடிக்கை கல்வியியல் செயல்பாடாக இல்லை என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது, ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பிறகு பள்ளிகளை திறந்த பின், 15 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட பிறகே தேர்வு நடத்த வேண்டும் என்பது பரவலாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை. இது முழுக்க முழுக்க குழந்தைகளின் உளவியல் சம்பந்தப்பட்டது. குழந்தைகள் 50 நாட்களாக வீடுகளில் அடைபட்டு இருக்கிறார்கள். கொரோனா குறித்து பல்வேறு செய்திகளை பார்க்கின்றனர்.

தொழிலாளர்களின் குழந்தைகள், பெற்றோர் இடம்பெயர்வதையும், நடைபாதையில் வசித்த மக்களின் குழந்தைகள், தற்காலிக முகாம்களிலும் தங்கி இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருவார்கள். இவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும்?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே, இந்த வைரஸ் நோயிலிருந்து போராட முடியும். இதற்கென மருந்து இல்லை என்கிறார்கள். அப்படியிக்க குடிசை வீடுகளில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு, அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பணம், அரிசி, பருப்பு, எண்ணெய்யில் எந்த ஊட்டசத்து உணவை மாணவர்கள் உட்கொண்டிருக்க முடியும்?

எனவே, குழந்தைகளின் மனநிலை, உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தேர்வு மையத்திற்கு மாணவர்களை வரவழைப்பது என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறை. எந்த அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அவசியம் என்ன? அதிகாரிகள் யார் இந்த ஆலோசனையை வழங்கினார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மே 31-ம் தேதி வரை ரயில் இயக்க வேண்டாம் என மாநில அரசு கேட்டுக்கொண்ட நிலையில், ஜூன் 1ம் தேதி தேர்வு என்பது எப்படி சரியானது? இது முழுக்க முழுக்க தனியார் வணிக நலன் சார்ந்ததாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக தனியார் பள்ளி நிர்வாகிகள் பழைய கட்டண பாக்கியை வசூலிக்க பள்ளி அலுவலகத்தை திறக்க அனுமதி கொடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கொடுத்த மனுவை 48 மணிநேரத்தில் அரசு பரிசீலித்து உள்ளதா? அதேபோல், தனியார் கல்லூரி நிறுவங்கள் 12ம் வகுப்பு தேர்வுகள் முடித்தால் தான் விண்ணப்பங்கள் வழங்க முடியும் என்று கூறியிருந்தனர்.
எனவே, தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு இழப்பு ஏற்படுவதை நினைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தோன்றுகிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்வு நடத்தப்படும் முடிவை திரும்ப பெற வேண்டும். பள்ளிகள் திறந்து 15 நாட்கள் வகுப்பு நடந்த பிறகே தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அதேபோல், 10ம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவு எடுக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க மாநில அரசு சார்ந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தாவிட்டால் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது என எந்த அடிப்படையில் பேசினார்கள் என புரியவில்லை. மக்களை திசை திருப்புகிறார்கள்? மத்திய அரசுக்கும் இந்த முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய புதிய சூழலை அரசு ஏற்படுத்தி கொடுக்கிறதா? தன்னுடைய உரிமைகளை இழக்க தமிழகம் தயாராகி விட்டதா? எந்த முடிவையும் மாநில அரசு எடுக்க மாட்டோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் சொல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருக்கக்கூடிய மாணவர்கள எப்படி தேர்வு எழுதுவார்கள். அவர்களை அழைத்து வர என்ன திட்டம் இருக்கிறது. மாணவர்கள் அனைவரும் ஒரே சூழலில் இல்லாத நிலையில், ஒரே தேர்வு என்பது நியாயம் இல்லை. இது கல்வியியல் செயல்பாடாக இல்லை. மாறாக சந்தை நலன் சார்ந்த நிர்வாக ரீதியான முடிவாகவே பார்க்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் பள்ளிக்கு வருவது தொற்றுப்பரவலை அதிகப்படுத்துமா, உளவியல் ரீதியான மாணவர்களின் பிரச்சனைகள் குறித்து மனநல மருத்துவர் சிவபாலன் கூறியதாவது: முதலாவதாக தேர்வு நடத்தப்படும் போது பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் கூடும். நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் சேரும் போது நோய் தொற்று பரவுவதற்கான சூழல் உள்ளது. அவர்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்வார்கள்.

மாணவர்கள் மூலமாக வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலில் மாணவர்கள் வெளியே வருவதும், தேவையின்றி மாணவர்களை இந்த தொற்றுக்கு ஆளாக்கப்படுவது சரியான அணுகுமுறையாக இல்லை. இதனால், நோய் தொற்று மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. இது முக்கியமான பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

15 வயது மாணவர்களுக்கு தற்போது நடக்கும் பிரச்சனையின் முழு விவரமும் தெரிந்து இருக்காது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஆபத்தான ஒன்று தன்னை சுற்றி நடப்பதாக அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு, அதனால் ஏற்படக்கூடிய மரணங்கள் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.

எனவே, மாணவர்கள் இயல்பான மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களிடையே அச்சம் பீதி இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால், மாணவர்களுக்கு படிப்பதிலும், தேர்வு எழுதுவதிலும் முழு கவனம் இருக்க வாய்ப்பில்லை. அவர்கடைய முழு திறனையும் தேர்வில் காட்ட முடியாது.

வசதி படைத்த வீட்டில் இருந்து வரும் மாணவர்களையும், அன்றாட வாழ்வை நடத்த போராடும் குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் மனரீதியான தாக்கத்திற்கு ஆளாகி இருப்பார்கள். இந்த சூழலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு, நியாயமான தேர்வாக நடத்த முடியுமா என்பது சந்தேகம். அரசாங்கம் இதை அனைத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வு தானே, எழுதிவிட்டு செல்லட்டும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.

இது ஒரு சவாலான காலகட்டம். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்துப்பார்த்தால் இளம் வயதினர் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தாக்கம் குறைவாக இருக்கிறது. ஆனால் இவர்கள் தான் தொற்றை மற்றவர்களுக்கு கடத்துபவர்களாக இருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் பள்ளிகளைத் திறக்க முதலில் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். பள்ளிகளை திறந்து விட்டு, மாணவர்களை வர வைப்பது மட்டுமே தீர்வல்ல.

எவ்வளவு நேரம் பள்ளியை நடத்துவது? வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் நடத்துவதற்கான இட வசதி இருக்கிறதா? மாணவர்கள் கைகழுவுதல் உள்ளிட்ட சுகாதாரத்திற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா? பள்ளியை சுத்தப்படுத்துவதற்கு போதுமான வசதி இருக்கிறதா? எவ்வளவு? அறிகுறியுடன் வரும் மாணவர்களை கண்டறியப்படும் கருவிகள் உள்ளனவா? தொற்று பரவாமல் இருக்க மாற்று ஏற்பாடு என்ன? என முதலில் நெறிமுறைகளை வகுக்கவேண்டும். அதன்பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Also see...
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading