இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் முடிவு செய்து அறிவித்திருந்தனர். அதன்படி, தங்கள் பதக்கங்களை மாலை 6 மணிக்கு கங்கையில் வீச குழுமியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு விரைந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத், மல்யுத்த வீரர்களிடமிருந்து பதக்கங்களை வாங்கி கொண்டார்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த போராட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிய நிலையில், ஐந்து மாதங்கள் நெறுங்கியும் தற்போதும் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது.
இதற்கிடையே மேரிகோம் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு பின்னரும் பிரிஜ் பூஷண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்த மல்யுத்த வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மல்யுத்த வீரர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து வைத்து ஜந்தர் மந்தர் போராட்டத் தளத்திலிருந்து நேற்று வெளியேற்றியதால், தங்கள் கடின உழைப்பால் நாட்டிற்காக ஈன்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச முடிவெடுத்தனர்.
இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் குழுமிய சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச ஆயத்தமாகி உடைந்து அழுதனர். அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத், வீரர்களை சமாதானப்படுத்தி பிரச்சனையை தீர்க்க 5 நாள் அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். நரேஷ் திகாயத்தின் கோரிக்கையை ஏற்று வீரர்கள் ஹரித்வாரில் இருந்து புறப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.