பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 19-ம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை ஆறு நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக ஜப்பான் சென்ற அவர் அங்கு நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். ஹிரோஷிமா நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜப்பான் வந்துள்ளார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான குவாட் (Quad) அமைப்பின் கூட்டமும் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குவதே குவாட் அமைப்பின் பிரதான நோக்கம். உலக நலன், மக்களின் நல்வாழ்வு, வளம் மற்றும் அமைதியை நிலைநிறுத்த குவாட் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வெற்றியும், பாதுகாப்பும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, ஆக்கப்பூர்மான நோக்கங்களை ஜனநாயகப்பூர்வான முறையில் நாங்கள் செயல்படுத்துவோம். 2024ஆம் ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடைபெறவுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை... புதின் அரசு உத்தரவு
முன்னதாக இந்த குவாட் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் மே 24 அன்று நடைபெற இருந்தது. அமெரிக்காவில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்காக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலியா பயணத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்தார். இதனால் சிட்னியில் நடக்கவிருந்த குவாட் நாடுகளின் தலைவர்களின் கூட்டம் கடைசி நேரத்தில் ஜி7 உச்சி மாநாடு நடக்கும் ஜப்பானுக்கே மாற்றப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.