தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே வலுவாக இருந்த பாஜக, இந்த தேர்தலில் அதனையும் இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பான் கர்நாடக அணுகுமுறை அக்கட்சிக்கு பெரும் பயனை அளித்துள்ளது. மாறாக பாஜகவோ நகர்புறங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார், பாஜக ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு எடுத்துக் கூற தவறவில்லை. தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே, PayCM என்ற பரப்புரையை முன்னெடுத்து பாஜகவின் ஊழல்களை அம்பலப்படுத்தினர்.
பாஜகவை போல் அல்லாமல், காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் முக்கிய தலைவர்களையே தேர்தல் வெற்றிக்காக நம்பியது. ஆனால் பாஜக பிரதமர், மத்திய அமைச்சர்கள் என வெளியூர் நபர்களை பரப்புரையின் போது பிரதானப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 40 சதவிதத்தை தாண்டியுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் மாண்டியா மற்றும் ஹசன் பகுதியில் உள்ள ஒக்கலிகா சமூகம் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவிலான ஆதரவை அளித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு லிங்காயத்து சமூக மக்களும் காங்கிரசுக்கு தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். லிங்காயத்துக்களின் முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து விலகி விட்டார். இதே போல் பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் சவடி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் லிங்காயத்து சமூக மக்களின் வாக்குகள் காங்கிரஸ் பெற வாய்ப்பாக அமைந்தது.
முதலமைச்சர் பொம்மை மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பாஜகவின் பிம்பத்தை உடைத்தது. சாதனைகளை தெரிவித்து வாக்கு கேட்காமல், பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா என தேசிய தலைவர்கள் நம்பி தேர்தல் களத்தில் இறங்கியது கர்நாடக பாஜக. பிரதமர் மோடியின் பஜ்ரங் தள் பரப்புரையும் எடுபடவில்லை. மேலும், பாஜக வேட்பாளர்கள் தேர்வு, முழுக்க முழுக்க தேசிய தலைவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உள்ளூர் அரசியலை புரிந்து கொள்ளாமல் வேட்பாளர்களை தேர்வு செய்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Karnataka Election 2023