மேற்கு வங்காளத்தில் உள்ள மேற்கு மேதினிபூரில் உள்ள தண்டனின் பனித்துபியா பகுதியை சேர்ந்தவர் சுபோஜித் தே. இவர் சிறப்பாக பாடும் திறன் கொண்டமையால் 'ரூமோன்' என்கிற மேடைப் பெயரும் உள்ளது. இவர் ஆணாகப் பிறந்தாலும் பெண்ணின் குரலில் பாடக் கூடியவர். இவர் ஒரு தொழில்முறை நடன கலைஞரும் ஆவார். இருப்பினும் இவர் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது மூத்த சகோதரி பாடுவதைப் பார்த்து, சிறு வயதிலேயே சொந்தமாக பாடல்களை உருவாக்க தொடங்கினார்.
சுபோஜித் வறுமையான குடும்பத்தில் வளர்ந்தார். தற்போது நடன பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார். குடும்பத்தை அவரது தந்தை அசிம் தே வழிநடத்துகிறார், அவர் ஒரு விவசாயி. பல்வேறு தனியார் பள்ளிகளில் நடனப் பாடங்களை வழங்குவதோடு, சுபோஜித் வீட்டு நிர்வாகத்தையும் எடுத்து நடத்தி வருகிறார் மற்றும் பல கிராமப்புறங்களில் நடனத்தை கற்பித்தும் வருகிறார்.
இவை அனைத்திற்கும் மத்தியில், இசை மீதான இவரது ஆர்வம் இவரை விட்டு விலகவில்லை. இவர் தனது மூத்த சகோதரியின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றார். இருப்பினும், இவரது குரல் பிறந்தது முதல் ஒரு பெண்ணின் குரலின் சத்தமும் சுருதியும் கொண்டது. எனவே இவர் ஒரு பெண்ணின் குரலில் பலவிதமான பாடல்களைப் பாடும் வல்லமை கொண்டுள்ளார். சில நேரங்களில் ரவீந்திர சங்கீத், சில நேரங்களில் லதா மங்கேஷ்கர் மற்றும் பல கலைஞர்களை போலவும் பாடும் திறன் கொண்டவர்.
சுபோஜித் தனியாக இசையை வாசிக்கவும் கற்று கொண்டார். இவர் ஒரு பெண்ணின் குரலில் பாடியதால், அண்டை வீட்டாரின் கேலியான விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, சுபோஜித் தனது வாழ்க்கையை நேர்மறையான திசையில் மாற்றுவதில் குறியாக இருந்து வருகிறார். அதனால் தான், எவ்வளவு கேலி கிண்டல்கள் இருந்தாலும் அவற்றை கடந்து வர முடிகிறது.
சுபோஜித்திடம் அவரது இசை பயணம் பற்றி கேட்டபோது, "பிறப்பிலிருந்தே என் குரல் ஒரு பெண்ணின் குரல் போன்றது," என்று சுபோஜித் கூறினார். "நான் பலவிதமான சிகிச்சைகளை முயற்சித்தாலும் எதுவும் மாறவில்லை. நான் சிறுவயதிலிருந்தே, என் அக்கா பாடுவதைக் கேட்டு பாடல்களைக் கற்றுக்கொண்டேன். இப்போது நான் நடனப் பயிற்றுவிப்பாளராக வேலை செய்கிறேன். ஆனால் நான் புதிய பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றைக் கேட்பதன் மூலம் சிறப்பாக பாடவும் முடியும்." என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
சுபோஜித்தின் தந்தை இவரது சாதனைகளைப் பாராட்டுகிறார். அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புடன் தனது மகன் மகத்துவத்தின் உச்சத்தை அடைவான் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். சுபோஜித் இப்போது தனக்காகப் பாடுவதைத் தவிர பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் தனது தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புற குடியிருப்பில் பல முட்டுக்கட்டைகள், கேலிகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் நம்பிக்கையை இழக்காமல் சாதித்து வருகிறார். அத்துடன் சுபோஜித் தனது இசை மற்றும் நடனத் திறன்களை மெருகேற்றியும் வருகிறார். தன்னம்பிக்கையை இழக்காமல் முன்னேறி செல்லும் சிறந்த மனிதர்களில் சுபோஜித்தும் ஒருவராக உள்ளார் என்றே சொல்லலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending