இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த தளங்களில் ஆபாச உள்ளடக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் வருகிறது. இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இது போன்ற விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரித்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இதை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகை தந்த அவர், நாக்பூரில் செய்தியாளர் சந்திப்பின்போது, ஓடிடி தளத்தில் அதிகரித்து வரும் ஆபாச மற்றும் தவறான வார்த்தைகள் பிரயோகம் குறித்துப் பேசினார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது, “படைப்பாற்றல் என்ற பெயரில் தவறான விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கம் பற்றிய புகார்கள் குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பான விதிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அதை பரிசீலிக்க அமைச்சகம் தயாராக உள்ளது. இந்த தளங்களில் படைப்பாற்றலுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, ஆபாசத்திற்கு அல்ல, மேலும் யாராவது வரம்பை மீறினால், படைப்பாற்றல் என்ற பெயரில் ஆபாசம் மற்றும் அதீத வன்முறையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை மேற்கொள்வதில் இருந்து அரசு பின்வாங்காது’’ என்றார்.
மேலும் அவர், "தற்போது பின்பற்றப்படும் செயல்முறை என்னவென்றால், பெறப்பட்ட புகார்களை தயாரிப்பாளர் நிலையிலேயே தீர்க்கப்பட்டு வருகிறது. 90 முதல் 92% புகார்கள் தேவையான மாற்றங்களை செய்து அவர்களால் தீர்க்கப்படுகின்றன. வெகுசில புகார்களே அரசு மட்டத்திற்கு வந்து, அங்குள்ள துறைவாரியான கமிட்டி அளவில், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆண்களுக்கான உரிமை இயக்கம் குறித்து உங்களுக்கு தெரியுமா..?
ஆனால், கடந்த சில நாட்களாக புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அதனைத் துறை தீவிரமாக கவனித்து வருகிறது. மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை தீவிரமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.’’ என்று அனுராக் தாக்கூர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anurag Thakur, Obscene