கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்தமாட்டோம் என்று மின்சார ஊழியரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் யார் முதலமைச்சர் என்பது குறித்து ஆலோசனையைக் கட்சி மேலிடம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரத்திலும் காங்கிரஸ் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கர்நாடகாவில் உள்ள ஒரு கிராம மக்கள் தாங்களாகவே செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இன்னும் அரசே அமையாத நிலையிலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை மக்களே செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஜலிகட்டே என்ற கிராமத்தில் வீடுகளில் மின்சார கணக்கீடு செய்வதற்காகச் சென்றுள்ளார் ஒரு மின்வாரிய ஊழியர். வீடுகளுக்குள் சென்று கணக்கெடுக்கும் பணியைச் செய்ய முயன்ற போது அவரை பொதுமக்கள் தடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மின்வாரிய ஊழியர் ஏன் தடுக்கிறீர்கள் எனக் கேட்டபோது கிராம மக்கள் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், இப்போதிலிருந்தே அவர்கள் மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். ”காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதெல்லாம் உண்மை என்றாலும், இன்னும் அரசே அமைக்கவில்லை. அரசு அமைந்த பிறகு 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக புதிய அரசு ஆணை வெளியிடுவர். அதன் பிறகு தான் இலவச மின்சாரம் கிடைக்கும். இப்போது மின்சாரத்திற்குக் கட்டணம் செலுத்தியாக வேண்டும்” என அந்த மின்வாரிய ஊழியர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கிராம மக்கள் கேட்கவில்லை. அவரை மின்சார கணக்கெடுக்கும் பணி செய்யவும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், மின்சார ஊழியருடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்சி அமைக்கப்படும் முன்பே இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது கர்நாடகாவில் பொதுமக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது தாங்கள் ஆட்சி அமைத்தால் தங்கள் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் உறுதியளித்திருந்தார். எனவே காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு முதல் ஆணையாக இலவச மின்சார திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Karnataka, Karnataka Election 2023