யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வு முடிவுகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 2 பெண் தேர்வர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆயிஷா மக்ராணி மற்றும் பீகாரை சேர்ந்த துஷார் ஆகியோர், தாங்கள் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்ப வைப்பதற்கு தங்களது பெயர்களை கொண்ட மற்ற 2 தேர்வர்களின் பதிவெண்களை நுழைவுச் சீட்டில் மாற்றம் செய்துள்ளனர்.
இவர்களின் வெற்றி தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், சந்தேகம் அடைந்த உண்மையான தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஆயிஷா மக்ராணி மற்றும் துஷார் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதனை உறுதிப்படுத்திய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், அந்த பதிவெண்களை கொண்ட உண்மையான தேர்வர்களின் விவரங்களை வெளியிட்டது.
அதன்படி, ஆயிஷா மக்ரானி என்பவரின் சரியான பதிவு எண் 7805064. இவர் 2022 ஜூன் 5-ந் தேதி நடைபெற்ற தொடக்க நிலை தேர்வில் வெற்றி பெறாதது மட்டுமின்றி அடுத்தகட்ட தேர்வுக்கும் செல்ல இயலவில்லை. இதற்கு மாறாக 7811744 என்ற பதிவு எண் பெற்றுள்ள ஆயிஷா ஃபாத்திமா உண்மையான தேர்வாளர் ஆவார். இவர் குடிமைப் பணிகள் தேர்வு 2022-ன் தேர்வு முடிவில் 184-வது தரவரிசையைப் பெற்று யுபிஎஸ்சி மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதே போல் 2208860 என்ற பதிவு எண் கொண்ட துஷார் என்பவரும் தொடக்க நிலை தேர்விலேயே தேர்ச்சி பெற தவறியதோடு அடுத்தக்கட்டத்திற்கும் செல்ல இயலவில்லை. இதற்கு மாறாக 1521306 என்ற பதிவு எண் கொண்ட பீகாரைச் சேர்ந்த துஷார் குமார் உண்மையான தேர்வாளர் 44-வது தரவரிசை பெற்று யுபிஎஸ்சி மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தேர்வு முடிவை வைத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: உள்ளூர் முதல் வெளிநாடு வரை.. BA தமிழ் கற்பவர்களுக்கு எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
எந்தவித சரிபார்ப்பும் செய்யாமல் பல ஊடக நிறுவனங்களும் , சமூக ஊடகப் பக்கங்களும் பொறுப்பின்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. இது போன்ற செய்திகளை வெளியிடும் போது யுபிஎஸ்சி-யிடம் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. யுபிஎஸ்சி-யின் தேர்தல் விதிகளின்படி தவறான தகவல்களை அளித்த இரு தேர்வர்களும் குற்றமிழைத்திருப்பதோடு அவர்களின் மோசடியான செயல்களுக்காக சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UPSC