முகப்பு /செய்தி /இந்தியா / ‘இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம்’: ரைசிங் இந்தியா மாநாட்டில் ராகுல்காந்தி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து..!

‘இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம்’: ரைசிங் இந்தியா மாநாட்டில் ராகுல்காந்தி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து..!

ஜெய்சங்கர் - ராகுல் காந்தி

ஜெய்சங்கர் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி ஒரு சமூகத்தையே அவமதித்துள்ளார், அதை சரி செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் சரிசெய்யவில்லை என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

நெட்வோர் 18 -ன்  ரைசிங் இந்தியா மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்தியாவினுடைய வளர்ச்சியில் பங்கேற்றவர்களை அழைத்து கவுரவிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இதில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

அப்போது ஜெய்சங்கரிடம், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது குறித்தும் அதைத் தொடர்ந்து மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில்,  “ராகுல் காந்தி ஒரு சமூகத்தையே அவமதித்துள்ளார். அதை சரி செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் சரிசெய்யவில்லை. இந்தியாவில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். சட்டம் என்றால் சட்டம்தான்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது 2019ஆம் ஆண்டில் சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரசாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?’ என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில்தான் கடந்த வாரம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மக்களவையின் எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம் என்றும், இவ்விவகாரத்தை மக்களிடம் கொண்டு செல்வோம் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதில் அவசரமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மூலம் பாஜக மற்றும் காங்கிரஸ்கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: External Minister jaishankar, NEWS18 RISING INDIA, Rahul Gandhi