கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அதேசமயம், இனம், மொழி, சாதி, மதம் என்ற பாகுபாடுகளை முன்வைத்து பல்வேறு மலிவான சில கருத்துக்களை அங்குள்ள அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில் சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கேஎஸ் ஈஸ்வரப்பா பங்கேற்றார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. இருப்பினும் சில நிமிடங்களிலேயே, மேடையில் எழுந்த நின்ற ஈஸ்வரப்பா தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் கன்னடதாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ஈஸ்வரப்பா, கர்நாடக தேர்தலில் ஒரு இஸ்லாமியர் கூட எங்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். இது, மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இந்த கூட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் உடனிருந்தார்.
இதையும் வாசிக்க: Watch | மைசூரில் 'தோசை சுட்டு ' மகிழ்ந்த பிரியங்கா காந்தி.. வைரலான வீடியோ
முன்னதாக, பெலகாவி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வாரிசு அரசியல் தலை தூக்கும். இந்த மாநிலம் கலவரங்களை சந்திக்கும். மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்லும்" என்று எச்சரித்தார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, அமித் ஷா மீது காங்கிரஸ் தலைவர்கள் காவல்துறையில் புகார் அளித்துளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka Election 2023