இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐபிஎல்லிற்கான தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபரூக்கியை பங்கேற்க வைத்ததால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த மே 12ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நிகழ்ச்சியில், ஸ்டேண்டப் காமெடியனான முனாவர் ஃபரூக்கி பங்கேற்றார்.
முனாவர் ஃபரூக்கி, தனது நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஸ்டேண்டப் காமெடியனான முனாவர் ஃபரூக்கி, இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக, பாஜக எமெலே மாலினி லக்ஷ்மன் சிங் கவுட்டின் மகன் ஏக்லவ்யா சிங் கவுட் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில், தான் சென்ற ஓர் காமெடி நிகழ்ச்சியில், இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசப்பட்டதாக தெரிவித்தார். மேலும் உடனடியாக அந்த நிகழ்ச்சியை நிறுத்த சொன்னதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பிறரின் மத உணர்வுகளை கெடுக்கும் விதமாக நடந்துக்கொண்டாதாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில், அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாகவும் வழக்குகள் பதியப்பட்டன.
இதையும் படிக்க : இனி ’நோ’ பால்-இல் பேட்ஸ்மேனுக்கு ரன்... ஐசிசி விதிமுறைகளில் மாற்றம்... முழு விவரம்..!
இந்த வழக்கை விசாரித்த மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றம், நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாப்பதே தங்களின் கடமை என கூறி, முனாவர் ஃபரூக்கியின் ஜாமினை நிராகரித்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஃபரூக்கிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும், இந்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றியது உச்சநீதிமன்றம். மேலும் இந்த வழக்கை ரத்து செய்வதற்கான மனுக்கள் மீது எந்த கருத்துக்களும் தாங்கள் தெரிவிக்கவில்லை எனவும், ஏதேனும் மனு தாக்கல் செய்யப்பட்டால், அதன் தகுதியின் அடிப்படையில் சட்டப்படி பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்நிலையில் தான், முனாவர் ஃபரூக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பங்கேற்றதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை புறக்கணிக்கிறோம் என பொதுமக்களும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.