இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியாவில் இந்து கடவுள் ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டு வருகிறது. பொதுவாகவே ஒரு கோவில் கட்டப்படும் போது, அதன் கட்டுமானத்திற்கும் கோவிலில் வைக்கப்படும் கடவுள் மற்றும் இதர விக்கிரகங்களை செதுக்குவதற்கும் தரமான பாறைகளை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்த வகையில் தற்போது அயோத்தியாவில் கட்டப்படும் கோவிலுக்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து சிறப்பு வாய்ந்த ஒரு பாறையானது பகவான் ராமரின் சிலையை வடிவமைப்பதற்காக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்காலாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த பாறையானது கோவிலின் கட்டுமானத்திற்கு மட்டுமல்லாமல் இந்து கடவுள் ராமரின் சிலையையும் வடிவமைக்க பயன்படுத்தப்பட உள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறு வடிவமைக்கப்படும் அந்த சிலையானது ராம் மந்திரில் வைக்கப்படும்.
இதற்கான வேலையை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தால் அமைப்பினர் சேர்ந்து செய்துள்ளனர். தற்போது இந்த அமைப்பினரால் அந்த கல்லிற்கு பூஜை செய்யப்பட்டு அயோத்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர் சுனில் குமார் அவர்கள் இதற்காக செய்யப்பட்ட பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
Read More :வலுவான யுத்தத்திற்கு தயாராக இருங்கள்... பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்...!
அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் அமைக்கப்படும் சிலைக்காக கர்நாடகாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த பாறையை மிகவும் கடினமாக தேடி கண்டுபிடித்துள்ளனர். வல்லுனர்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மலையின் உச்சியில் இருந்து இந்த சிறப்புமிக்க பாறையை தேர்ந்தெடுத்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 சிறந்த கலைஞர்கள் இந்த ராமர் சிலையின் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து கடவுள்களில் மிகவும் முக்கியமான கடவுளாக கருதப்படும் ராமரை இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் வழிபட்டு வருகிறார்கள். ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள படி ராமனின் பிறந்த ஊரான அயோத்தியாவிலேயே தற்போது அவருக்கு பிரம்மாண்டமான அளவில் கோவில் அமைக்கப்பட உள்ளது.
2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் திறக்கப்பட உள்ள அந்த கோவிலுக்கான பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ராமரின் பக்தர்கள் இந்த கோவிலின் திறப்பு விழாவினை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayodha, Ayodhya Ram Temple