வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், வெண் பட்டு போர்த்தியது போன்ற காட்சிகள், கோடை விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு காட்சி விருந்து படைத்தன.
என்னதான் கோடைக்காலம் தொடங்கி விட்டாலும், குளிர்காலத்துக்கு போக மனம் இல்லை போலும். அந்த அளவிற்கு வடமாநிலங்களில் பனிப்பொழிவு கொட்டி தீர்த்து வருகிறது.டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் எல் நினோ எனப்படும் கால நிலை மாற்றம் காரணமாக, சுட்டெரிக்கும் வெயிலுக்கு பதிலாக மழையும், பனியும் மாறி மாறி பொழிந்து வருகிறது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் வழக்கத்துக்கு மாறாக மே மாதத்திலும் கடும் பனிப்பொழிவு நீடிப்பதால், இமயமலையும் அதன் அடிவாரமும் வெள்ளை பூச்சு பூசியது போன்று காட்சியளிக்கின்றன. தலைநகர் சிம்லாவில் ஆலங்கட்டி மழை கொட்டியது. மேலும், லாஹவுல், ஸ்பிதி உள்ளிட்ட பழங்குடியின மாவட்டங்களில் 2 முதல் 8 டிகிரி வரை வெப்பநிலை குறைந்துள்ளது.
2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழையும், ஒரு சில இடங்களில் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 சாலைகள் மூடப்பட்டன. சாலைகளில் கொட்டிகிடக்கும் பனி கட்டிகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர்.
இதே போல் ஜம்மு காஷ்மீரிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், பாரமுல்லாவில் பேரிடர் மேலாண்மை ஆணையம் பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.அனந்த்நாக், கிஷ்த்வார் மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குலு, மணாலி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு கோடை விடுமுறையை கழிக்க சென்றவர்கள், எதிர்பாராத இந்த தட்பவெப்பநிலை மாற்றம், மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே சமயம், காலம் தவறிய மழை மற்றும் பனிப்பொழிவால் ஆப்பிள் உள்ளிட்டவற்றின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.