நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, எட்டு வயதில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாது பற்றி மனம் திறந்தார். நெட்வொர்க் 18-ன் ரைசிங் இந்தியா மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பேசிய பாஜகவின் குஷ்பு, தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொன்னால் தனது தாய் பாதிக்கப்படுவார் என மிரட்டப்பட்டதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு சுந்தர், 15 வயதில் தன் தந்தையை எதிர்த்து போராடத் தொடங்கியபோதுதான் தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமை முற்று பெற்றதாக கூறினார். இதுகுறித்து மேலும் பேசிய குஷ்பு, ‘நான் 15 வயதில் என் தந்தையை எதிர்க்க துணிந்தபோது பாலியல் துன்புறுத்தலில் இருந்து வெளியே வந்தேன். இன்று எனக்கு 52 வயதாகிறது; இத்தனை ஆண்டுகள் இந்த விஷயம் என்னுள் மட்டுமே இருந்தது. பாலியல் தொந்தரவிற்கு ஆளான எவருக்கும் இதுபோன்ற விஷயங்கள் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், தற்போது நான் மிகவும் இலகுவாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்குள் புதைந்திருந்த நிகழ்வு இறுதியாக வெளியே வந்துள்ளது. ஏதோ ஒரு பாரத்தை சுமக்கிறோம் என்ற உணர்வு இனி இருக்காது’ என்று குஷ்பு குறிப்பிட்டார்.
தன்னை பொறுத்தவரை இதுதான் பேச வேண்டிய சரியான தருணம் எனக் கூறிய நடிகை குஷ்பு, ‘இப்போது இல்லை என்றால் எப்போது? இதனை நாம் நம் கல்லறைக்கு கொண்டுச் செல்ல வேண்டுமா? நான் தாமதித்துவிட்டேன்; ஏனெனில், என் காலத்தில் இதுகுறித்து பேச எனக்கு பெரிதாக தைரியம் இல்லை, ஆதரவு இல்லை, சட்டங்கள் இல்லை, போக்சோ இல்லை, மகளிர் ஆணையம் இல்லை, எனக்கு எந்த விதமான சமூக ஆதரவும் இல்லை’ என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் பேசிய குஷ்பு, ‘எங்கள் தந்தை எங்களை விட்டுச்சென்றபோது அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரப் போகிறது என்று நாங்கள் திசை தெரியாமல் நின்றோம். ஆனால், அப்போது எனது தந்தைக்கு எதிராக நின்றதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், அவர் எங்களுடன் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.