சாவர்க்கர் குறித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரைப் பற்றி ராகுலின் பாட்டி இந்திரா காந்தி கூறியவற்றை ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். அவதூறு வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் வகித்து வந்த வயநாடு எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது அவரிடம், தங்கள் மீதான குற்றத்திற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி ‘எனது பெயர் காந்தி, சாவர்க்கர் இல்லை. காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் ’ என்று கூறினார். அவரது பதில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நியூஸ் 18 நடத்தி வரும் தி ரைசிங் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது- மன்னிப்பு கேட்க விருப்பமில்லை என்றால் அதைத்தான் ராகுல் காந்தி வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் மாறாக அவர் சாவர்க்கரின் பெயரை களங்கப்படுத்தி உள்ளார். இந்தியாவின் விடுதலைக்காக மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களில் சாவர்க்கரும் ஒருவர். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் என்றால் அவர் சாவர்க்கராக மட்டும் தான் இருப்பார் என்று கருதுகிறேன். சாவர்க்கர் பற்றி தனக்கு தெரியவில்லை என்றால், ராகுல் காந்தி அவரது பாட்டி இந்திரா காந்தி சாவர்க்கர் குறித்து கூறியதை தெரிந்து கொள்ள வேண்டும். ராகுலின் நண்பர்களாக இருக்கும் சரத் பவர் மற்றும் சிவசேனா கட்சியினரும் ராகுலைப் போன்றுதான் சாவர்க்கர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களும் இந்திரா காந்தி கூறியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.
1980 ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திரா காந்தி பண்டிட் பக்ளேவுக்கு எழுதிய பதில் கடிதத்தில் ‘1980 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான வீர சாவர்க்கரின் துணிச்சலான எதிர்ப்பானது, நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்தியா நினைவுகூறும் மகனின் (சாவர்க்கரின்) பிறந்தநாளைக் கொண்டாடும் திட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.’ என்று கூறியுள்ளார். சாவர்க்கரை நினைவுகூறும் வகையில் 1966-இல் தபால் தலையை இந்திரா காந்தி வெளியிட்டார். மத்திய அரசு சார்பாக சாவர்க்கரின் ஆவண படம் தயாரிக்கப்பட்டதுடன், மும்பையில் அவரது நினைவிடம் அமைக்க தனிப்பட்ட முறையில் இந்திரா காந்தி ரூ. 11 ஆயிரம் வழங்கியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NEWS18 RISING INDIA